சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் காலமானார். அவருடைய மறைவை தொடர்ந்து சூலூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழகச் சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தத் தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுடன் சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்குகளைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையம் இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தலை அறிவிக்கவில்லை.  இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து காலியாக 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. இந்நிலையில் இந்த மூன்று தொகுதிகளோடு சேர்ந்து சூலூர் தொகுதிக்கும் தேர்தலை நடத்த கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் சூலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ள தகவலை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு இன்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் வேட்புமனுத்தாக்கல் முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால், தேர்தல் ஆணையம் உடனடியாக  தனது முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த 17-ம் தேதி மறைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு அதற்கு அடுத்த நாளே உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனவே சூலூர் தொகுதிக்கும் அதேபோல தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.