மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் கிடைத்தன. ஆனால், சுழற்சி முறையில் முதல்வர், 50 சதவீத அமைச்சர்கள் என பாஜகவுக்கு சிவசேனா விதித்த நிபந்தனைகளால் கூட்டணியில் சிக்கல் நிலவிவருகிறது. சிவசேனாவின் நிபந்தனைகள் பாஜக ஏற்கவில்லை. இதனால். ஆட்சி அமைவதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் தொடர்ந்து பிடிவாதம் காட்டிவருவதால், மகாராஷ்டிராவில் அரசியல் பரபரப்பு அடங்கவில்லை.


இதற்கிடையே சிவசேனா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாகக் கூறியதால், இன்னொரு புறம் அரசியல் பரபரப்பு சூடுபிடித்துள்ளது. இந்தத் திடீர் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவை பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சிவசேனா எம்.பி.க்கள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசியதையடுத்து, இந்தப் புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டிருப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால், பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றும் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உட்காரப்போகிறோம் என்றும் காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.
தொடர்ந்து குழப்பங்கள் நிலவிவரும் நிலையில், சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன. இதுதொடர்பாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜ்ஜிய சபா காங்கிரஸ் எம்.பி. ஷூசைன்  தல்வாய் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 
அதில், “ பாஜக, சிவசேனாவுக்கு இடையே நிறைய வித்தியாசம் உள்ளது. குடியரசுத் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய பிரதீபா படேல், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு சிவசேனா ஆதரவு அளித்தது. அதை மனதில் கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க சிவசேனாவுக்கு காங்கிரஸ்  ஆதரவு அளிக்க வேண்டும். அக்கட்சி ஆதரவு கேட்டால், அதை ஏற்க வேண்டும்” என்று ஹூசைன் தல்வாய் தெரிவித்துள்ளார்.