திமுக கூட்டணியில் பாமக சாயுமா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பாமக - விசிக இடையே 2011-ம் ஆண்டில் நடந்த திருப்பம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்து வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்திருக்கின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவில் அமைந்த கூட்டணி அப்படியே தொடர்கிறது. அக்கூட்டணி கட்சிகள் கூட்டம் அடிக்கடி நடப்பதன் மூலம் அது உறுதியாகி உள்ளது. ஆனால், அதிமுகவில் தலைமையில் அமைந்த கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு திசையைப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றன. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கூட்டணி காட்சிகள் மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இதில் முக்கியமாக எதிர்பார்க்கப்படுவது பாமக என்ன நிலையை எடுக்கும் என்பதுதான். திடீர் திருப்பமாக எதிரும் புதிருமாக இருக்கும் விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன் எந்தப் பகையும் இல்லை என்று ராமதாஸ் சொல்கிறார். திமுகவின் புதிய பொதுச்செயலாளராகியுள்ள துரைமுருகன், பாமகவை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்புவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தச் சூழலில் தொல்.திருமாவளவனுடன் எந்தப் பகையும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதன் மூலம், அவர் திமுக பக்கம் சாய்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.