தி.மு.க இளைஞரணியினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கே.என் ஜி.புதூர் பகுதியில் இன்று நடைபெற்றது. தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், உறுப்பினர் அட்டையை இளைஞரணியினருக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். அந்தப் பயணத்தை முடித்து திரும்ப வரும்போது கொஞ்சம் நெடிய பயணமாக இருந்ததால் கொஞ்சம் சுமையாகத்தான் இருந்தது. ஆனால் உங்களையெல்லாம் பார்த்தவுடன் தெம்பு வந்ததுள்ளது. நம் கழகத்தில் மாணவரணி, மீனவரணி, வழக்கறிஞரணி என்று எத்தனையோ அணிகள் இருந்தாலும் நம்முடைய தலைவரின் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணிதான். அவர் வகித்த பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் திராவிட முன்னேற்றக் கழகம் 90% இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். இந்த அராஜக அரசு கொடுத்த இடையூறுகளை தாண்டி 60 சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம். தமிழக மக்கள் இப்போதே தயாராகிவிட்டார்கள். இன்னும் 12 மாதங்கள் தான் இருக்கின்றன. இன்று எதிர்க்கட்சித் தலைவராக உள்ள நமது தலைவரை அடுத்த ஆண்டு இதே தேதியில் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்போம்” எனப் பேசினார்.