தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகிவருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தாலும், இரு கட்சிகள் இடையே அவ்வப்போது வார்த்தைப் போர் வெடித்துவருகிறது. வேல் யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடை இரு கட்சிகளுக்கும் இடையே எதிரெதிர் விமர்சனங்களை வைக்க வைத்துள்ளது. எனவே இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இந்நிலையில் பாஜக தேசிய முன்னாள் தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித்ஷா 21-ம் தேதி சென்னைக்கு வருகிறார். சென்னைக்கு அமித்ஷா வருவதால், அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கூட்டணி குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினியைச் சந்தித்து பேசுவார் என்றும் தகவல்கள் உலா வருகின்றன. 
இதற்கிடையே ரஜினிகாந்தை அமித்ஷா சந்தித்து பேசமாட்டார் என்று பாஜகவின் தமிழக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்தான் வருகிறார். தேர்தல் கூட்டணி குறித்து பேச இன்னும் நாட்கள் உள்ளன. நடிகர் ரஜினிகாந்த்தை அமித்ஷா சந்திக்கும் எந்தத் திட்டமும் இதுவரை இல்லை.” என்று தெரிவித்தார்.