கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடம்பெற்று தேர்தலை சந்தித்தன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக நேற்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்துள்ளனர். சுமார் 1 மணி நேரம் தேர்தல் தொடர்பாக அவர்கள் ராமதாஸுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த ஆலோசனையின்போது டிசம்பர் 27 அன்று அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுகவின் இந்த அழைப்புக்கு பாமக எந்த உத்திரவாதமும் கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் டிசம்பர் 31 அன்று பாமக ஆன்லைன் மூலம் பொதுக்குழுவை கூட்ட உள்ளது. அந்தப் பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகுதான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும் என்று பாமக தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிமுக - பாமக இடையேயான இன்னும் உறுதியாகாமல் இழுபறி நீடிக்கிறது.
ஏற்கனவே பாஜக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்காமல் அதிமுகவுடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகிறது. ரஜினி கட்சி தொடங்கிய பிறகு அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து கூட்டணி குறித்து முடிவு எடுக்கலாம் என்ற எண்ணத்தில் பாஜக இருப்பதாகக் கூறப்படுகிறது.  இன்னொரு கூட்டணி கட்சியான தேமுதிகவும் அதிமுகவை அவ்வப்போது விமர்சிப்பதோடு, தங்களுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன்தான் கூட்டணி என்று போக்குக் காட்டிவருகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையில் கூட்டணியில் இருந்ததுபோல, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா என்பது கேள்விகுறியாகியுள்ளது.