திமுக தலைவராக கலைஞர் இருந்த போது தனது வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர் மு.க.ஸ்டாலின். இதனை உணர்ந்து கட்சிப்பணிகளில் தனது இளமைக் காலம் முதலே தீவிரம் காட்டியர் ஸ்டாலின். தனது தந்தை கட்சியின் தலைவர் என்பதற்காக மட்டுமே தனக்கு பதவி கிடைத்தது என்கிற இமேஜ் வந்துவிடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதே போல் கலைஞரும் ஸ்டாலின் சிறந்த நிர்வாகி என்கிற இமேஜை உருவாக்கும் வகையிலான பணிகளை அவருக்கு கொடுத்து வந்தார். ஆனாலும் கூட அவ்வப்போது கலைஞர் – ஸ்டாலின் இடையே மனஸ்தாபங்கள் உருவாகும்.


கட்சி நிர்வாகிகள் நியமனம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என கலைஞருடன்  பல இடங்களில் ஸ்டாலின் முரண்படுவார். இதனால் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் கலைஞர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பார். ஒரு கட்டத்தில் ஸ்டாலின் தமிழகத்திலும் சரி டெல்லியிலும் சரி தனக்கென்று தனி லாபி வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார். மேலும் கட்சியிலும் சரி தமிழக அரசியல் களத்திலும் சரி தன்னை முன்னிலைப்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பக்கபலமாக இருந்தார்.

இதன் பிறகு தான் ஸ்டாலின் கட்சி நிலைப்பாடு என்பதை தாண்டி தனக்கென்று சில நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்தார். அவற்றை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் மறைமுகமாக அந்த நிலைப்பாட்டிற்கு சாதகமாக திமுகவை நகர்த்த ஆரம்பித்தார். அப்படித்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது சமூக வலைதள பக்கங்களில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின். இது கலைஞரை  மிகவும் டென்சன் ஆக்கியது. மேலும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியதால் நாம் எதிர்கொள்ள வேண்டிய தர்மசங்கடங்களை ஸ்டாலினிடம் நேரடியாகவே கலைஞர் விளக்கியதாக சொல்வார்கள்.


அதன் பிறகு தான் தனது சமூக வலைதள பக்கத்தை நிர்வகிக்கும் நபர் தனக்கு தெரியாமல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வெளியிட்டுவிட்டதாக ஸ்டாலின் விளக்கம் அளித்தார். ஆனால் உண்மையில் அப்போது இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என்கிற பிரச்சாரத்தை முறியடிக்கும் ஒரு முயற்சியாக விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை ஸ்டாலின் வெளியிட்டதாக பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திமுக இந்து விரோத கட்சி என்கிற பிரச்சாரம் வேகம் எடுத்துள்ளது. ரம்ஜானுக்கு வாழ்த்து சொன்ன ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்னாரா? என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.


மேலும் கறுப்பர் கூட்ட விவகாரத்திலும் திமுக அவர்களுக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்று விநாயகர் சதுர்த்தி நாளில் நினைவுபடுத்தினர். கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடிக்கும் திமுக ரம்ஜானுக்கு வாழ்த்து கூறிவிட்டு இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாதது ஏன் என்கிற கேள்வியில் லாஜிக் இருப்பதாக நடுநிலை இந்துக்கள் உணரத் தொடங்கியது பல்வேறு ட்வீட்கள் மூலம் தெரியவந்தது. இந்த நிலையில் தான் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் படத்தை வெளியிட்டுள்ளார். அந்த விநாயகர் படத்தை உதயநிதியின் மகள் கையில் வைத்திருப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.


ஆனால் மகள் முகத்தை கட் செய்துவிட்டு விநாயகர் மட்டும் இருப்பது போல் உதயநிதி அந்த புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டை திமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பேஜில் ரீட்வீட் செய்திருந்தனர். இதனால் திமுகவிலேயே உதயநிதிக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. உதயநிதியின் செயல் குறித்து உடனடியாக ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக சொல்கிறார்கள்.

உதயநிதியை கண்டிக்க வேண்டும் என்று சில சீனியர்கள் வெளிப்படையாகவே ஸ்டாலினிடம் கொதித்ததாகவும் சொல்கிறார்கள். ஸ்டாலின் அந்த புகைப்படத்தை நீக்குமாறு கூற அதற்கு மறுப்பு தெரிவித்து உதயநிதி தரப்பில் ஒரு விளக்கம் மட்டும் கொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். இந்த  விவகாரம் இப்படி முடிந்துவிட்டதாக கருதினாலும் உண்மையில் தனது தந்தை ஸ்டாலின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக உதயநிதி ஒரு நிலைப்பாட்டில் இருப்பதையே இது காட்டுகிறது.


விநாயகர் சதுர்த்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு பேரை ஸ்டாலின் அழைத்து கண்டித்ததாக சொல்கிறார்கள். நிர்வாகிகள் நியமனத்தில் நேரடியாக தலையிட வேண்டாம் என்று உதயநிதிக்கு ஸ்டாலின் தரப்பில் இருந்து நெருக்கடி வந்ததாகவும் சொல்கிறார்கள். இதனால் எரிச்சலில்  இருந்த உதயநிதி விநாயகர் சதுர்த்தி புகைப்படம் மூலம் தனது தந்தையை சீண்டிப்பார்த்ததாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் கலைஞர் இருந்த போது அவர் மட்டுமே அதிகார மையமாக இருந்தார். ஆனால் இப்போது உதயநிதியும் திமுகவில் ஒரு அதிகார மையமாக செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.