பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தால் கொரோனா பரவாதா? திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா? என்றும் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் நேற்றுமுன்தினம் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அவரது இல்லம் எதிரே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பிரசாரம் செய்த சிறிது நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். 1 மணி நேரத்திற்கு பின் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, நேற்று அவர் தனது 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். நாகை அக்கரைப்பேட்டையில் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார்.பின்னர், மீன்பிடி துறைமுகத்தில் ஒரு விசைப்படகில் ஏறி கடல் முகத்துவாரம் வரை பயணம் செய்தார். சிறிது தூரம் விசைப்படகை ஓட்டினார். படகில் இருந்து கீழே இறங்கியதும் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை கைது செய்தனர். இதை கண்டித்து போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்ததுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கைதான அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள திருமண மண்டபத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு..க.வினரை போலீசார் இரவு 8 மணிக்கு விடுவித்தனர்.

அப்போது உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்;- காவல்துறை எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் எங்களது பிரசாரம் தொடரும். தி.மு.க.வின் பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு உள்ளது. மக்களை சந்திக்க சென்ற என்னை கைது செய்த தமிழக போலீஸ், அமித்ஷா நேற்று மக்களை சந்திக்க வந்தபோது ஏன் கைது செய்யவில்லை. பிரதமர் மோடி, அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தால் கொரோனா பரவாதா? திமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா? என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திமுக தேர்தல் பிரசாரத்தை முடக்கும் அதிமுக அரசு அமித் ஷாவை வரவேற்க,  தங்கள் கட்சிக்காரர்களை அனுப்பி கூட்டத்தை கூட்டியிருக்கிறது. அதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் யாரையும் கைது செய்யவில்லை? அதிமுகவை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார் அமித்ஷா. திமுகவின் தேர்தல் பிரசாரத்தை முடக்கினால், நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.