why subramanian swamy supports dinakaran and oppose rajinikanth

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பதற்கான காரணம் குறித்து சீமான் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். 

இந்நிலையில், ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். கட்சி தொடங்கி, அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் உள்ளது. தமிழ் தேசிய அரசியல் மற்றும் மாற்று அரசியலை முன்னெடுக்கும் சீமான், ரஜினியின் அரசியல் வருகையவே கடுமையாக எதிர்க்கிறார்.

ரஜினியின் அரசியல் வருகையை மட்டுமல்லாமல் ரஜினியை தனிப்பட்ட முறையிலும் கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. ரஜினியை படிப்பறிவற்றவர் என சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சீமானிடம் ரஜினியின் அரசியல் வருகையை பாஜகவினர் வரவேற்கும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி மட்டும் விமர்சிக்கிறாரே என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான், குருமூர்த்தி எதிர்ப்பதை சுவாமி வரவேற்பார். குருமூர்த்தி ஆதரவளிக்கும் விஷயத்தை சுவாமி எதிர்ப்பார். குருமூர்த்தியும் சுப்பிரமணியன் சுவாமியும் பரஸ்பரம் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுப்பர். எனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சுவாமி எதிர்ப்பதற்கான முக்கிய காரணம், ரஜினிக்கு குருமூர்த்தி ஆதரவளிப்பதுதான். தினகரனை குருமூர்த்தி எதிர்ப்பதால்தான் சுவாமி ஆதரிக்கிறார். இதுதான் தினகரனுக்கு ஆதரவையும் ரஜினிக்கு எதிர்ப்பையும் சுப்பிரமணியன் சுவாமி வாரிவாரி வழங்குவதன் சூட்சமம் என சீமான் தெரிவித்தார்.