பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், ‘நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலங்கானா முதல்வர் காட்டும் வழியையாவது தமிழக முதல்வர் பின்பற்ற வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், 11-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. ஆனால், நீதிமன்ற வாதத்தின்போது, வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்பதால், இப்போது தேர்தலை நடத்துவதுதான் நல்லது என்று ஆளும் அதிமுக அரசு தெரிவித்திருந்தது. இதற்கிடையே கொரோனாவை பரவலை காரணம் காட்டி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தெலங்கானா அரசு ரத்து செய்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு வெளியிட்டார்.


இதனையடுத்து தெலங்கானாவைப் போல தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிவருகின்றன. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் மூலம் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், “3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO காட்டும் வழியையாவது @CMOTamilNadu பின்பற்ற வேண்டும்!” என்று ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அவர்களின் வலி, வேதனையை உணர முடியும் என்பதற்கு @TelanganaCMO உதாரணம். ஆனால், காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி என கூவத்தூர் வழியாக புது ரூட் பிடித்தவர்களுக்கெல்லாம் அவற்றை உணரமுடியாது என்பதற்கு @CMOTamilNadu சான்று” என்று தெரிவித்துள்ளார்.