சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவின் ரூ. 300 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில மாதங்களில் விடுதலையாக இருக்கிறார். இந்த நிலையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சசிகலாவின் ரூ. 300 கோடி மதிப்பிலான 65 சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடு என 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாகக் கூறப்பட்டது.இந்த சூழலில், 2003-2005ம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.