மோடி கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள்.. ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்காதது ஏன்.? வெளியான தகவல்
பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிலையில், பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம் என கூறி வரும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்காதது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி- தொகுதி பங்கீடு தீவிரம்
நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கு நெருங்க எந்த கட்சி, எந்த கட்சியுடன் கூட்டணி.? ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி ஒதுக்கீடு என முடிவெடுக்க முடியாமல் பிரதான அரசியல் கட்சிகள் திணறி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தனது முதல் கட்ட பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டது.
அந்த வகையில் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு தலா ஒரு தொகுதியை வழங்கி விட்டது. அடுத்த கட்டமாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் தொகுதிகள் பிரித்து வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த முறை வழங்கியதை விட கூடுதல் தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கட்சிகள் கோரிக்கை விடுப்பதால் திமுகவால் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
அதேபோல அதிமுக- பாஜக இடையிலான கூட்டணி முறிவடைந்துள்ள நிலையில் இரண்டு கட்சிகளும் புதிய கூட்டணி உருவாக்க திட்டம் போட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் பாமக மற்றும் தேமுதிக இதுவரை எந்தவித முடிவு எடுக்காததால் கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் பாஜக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், தேவநாதன் உள்ளிட்ட சிறிய கட்சிகள் இணைந்துள்ளது. இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணமாலை மேற்கொண்டிருந்த என் மண் என் மக்கள் பாத யாத்திரை நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்து. அப்போது கூட்டணி கட்சி பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான ஏ.சி சண்முகம், ஜி கே வாசன், தேவநாதன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஓபிஎஸ் பங்கேற்காதது ஏன்.?
இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் முதல் ஆளாக ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகி விடுவார். ஆனால் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாஜக தரப்பில் கூறுகையில் பிரதமர் மோடி கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கவில்லையென கூறப்படுகிறது.
மீண்டும் அதிமுக கூட்டணிக்கு முயற்சியா.?
ஏனென்றால் அதிமுகவுடன் இணைந்தால் மட்டுமே தமிழகத்தில் வெற்றி பெற முடியும் என பாஜக கருதுகிறது. எனவே நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்குள் அதிமுகவை தங்களின் வசம் கொண்டுவர பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதன் காரணமாகவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை நேற்றைய கூட்டத்திற்கு அழைக்கவில்லையென தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்
அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்.. தப்புவாரா தங்கம் தென்னரசு? 3 நாள் டைம் கொடுத்த நீதிபதி.!