உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமான கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார்.  நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 30 கோடிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசும்போது, “இந்தியாவில் செலுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவுடன் முகக்கவசங்களை நீக்கிவிட வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சில கேள்விகளை முன்வைத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “புகழ்பெற்ற மருத்துவர்கள் பலர் கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், அதே மருத்துவர்கள் மக்கள் எந்த தடுப்பூசியை எடுக்க விரும்புகிறார்கள் என்பதை மக்கள் தேர்வு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது, நம்பகமானது, கேள்விக்கு அப்பாற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.


ஆனால், பல நாடுகளில் நடந்ததைப் போல இந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. அது ஏன்? கோவேக்சின் அவசர கால பயன்பாடாக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எந்த தடுப்பூசியைத் தேர்வு செய்வது என்ற அதிகாரத்தை மக்களுக்கு அரசு கொடுக்கவில்லை. கோவேக்சின் 3ம் கட்ட சோதனைகள் முடிவடையாத நிலையில், அதன் செயல்திறன் குறித்து கவலை எழுந்துள்ளது” என மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.