Asianet News TamilAsianet News Tamil

குருமூர்த்தி ஏன் அப்படிச் சொன்னார்? ஜெயக்குமார் ஏன் ரியாக்ட் செய்தார்? குழப்பங்களின் பின்னணியில்..!

why gurumurthy used impotent word and why jayakumar reacts too much
why gurumurthy used impotent word and why jayakumar reacts too much
Author
First Published Dec 27, 2017, 7:51 PM IST


தமிழக அரசியல் களம், ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் என்று இருந்த நிலையில், அண்மைக் காலமாக ஆர்.கே.நகருக்கு முன், ஆர்.கே.நகருக்குப் பின் என்று மாறியுள்ளது. 

ஜெயலலிதாவுக்கு நெருங்கிய நண்பராக, அரசியல் ஆலோசகராக, குடும்ப நண்பராக, நலம் விரும்பியாக என, எல்லாமாக இருந்தவர் பத்திரிகையாளரும் நடிகருமான சோ ராமசாமி. முதன் முதலில் ஜெயலலிதா 1991ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது, அவருக்கு ஆலோசனை சொல்லி வந்த சோ, பின்னாளில் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதாவின் அதிகார வரம்புகள் சென்றபோது, அவரது நிலைப்பாட்டை எதிர்த்து, திமுக. மீண்டும் வர தன்னாலான அரசியல் உதவிகளைச் செய்தார். அதனால் 1996ல் ஜெயலலிதா படுதோல்வியைச் சந்தித்து, திமுக., ஆட்சிப் பொறுப்பேற்றது. 

அப்போது நடந்த நிகழ்வுகளால், மனம் வருந்திய ஜெயலலிதா மீண்டும் சோ.,வுடன் இணக்கம் காட்டினார். அதன் பின்னர் ஜெயலலிதா மறையும் வரை அரசியல் ஆலோசகராக இருந்து நட்பு பேணினார் சோ. மத்திய பாஜக.,வில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஜெயலலிதாவுக்கும் அக்கட்சிக்கும் ஒரு பாலமாக இருந்தார். ஜெயலலிதா மறைந்த மறு நாளே சோ.,வும் மறைந்தார் என்பது இன்றளவும் ஆச்சரியமாகப் பேசப்படும் விஷயம். 

சோ., இருந்தபோதே ஆடிட்டரும் பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தியும் ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகியிருந்தார். திராவிட அரசியல் ஆழமாக இருந்த தமிழகத்தில் தேசிய சிந்தனையுள்ள திராவிடக் கட்சித் தலைவராக ஜெயலலிதா அறியப் பட்டதால், அவருடைய அரசியல் நடவடிக்கைகளை பெரிதும் ஆதரித்தே வந்துள்ளார் எஸ்.குருமூர்த்தி. இருப்பினும், காஞ்சிப் பெரியவர் மீதான நடவடிக்கை உள்ளிட்ட ஜெயலலிதா எடுத்த சில நடவடிக்கைகளில் அதனை விமர்சித்தும், எதிர்த்தும் வந்துள்ளார். திராவிட அரசியல் களனாக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., அவரைத் தொடர்ந்து வந்த ஜெயலலிதா இருவருமே, தேசிய சிந்தனையிலும், ஆன்மிக சிந்தனையிலும் ஊறியிருந்ததால் அதிமுக.,வின் அனுதாபியாகவே பார்க்கப் பட்டிருக்கிறார்கள் இவர்கள். 

ஆனால், 1996ஆம் ஆண்டு நிகழ்வுகளாலும் பின்னரும் தொடர்ந்த, சசிகலா குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்ட கசப்பான பின்னடைவுகளாலும், அக்குடும்பத்தின் மீதான பார்வை மட்டும் இவர்கள் இருவருக்குமே போகவில்லை. 

why gurumurthy used impotent word and why jayakumar reacts too much

இத்தகைய பின்னணியில் தான் தற்போது சோ நடத்தி வந்த இதழ் பொறுப்பை  எடுத்துக் கொண்டு எழுதி வருகிறார் எஸ்.குருமூர்த்தி. அத்துடன், பழைய நினைவுகளில் ஆட்சியில் இருக்கும் அதிமுக.,வினரும் சோ இல்லாத நிலையில், அவருக்கு அடுத்து அந்த இடத்தில் தற்போதுள்ள எஸ்.குருமூர்த்தியிடம் தங்கள் அரசியல் ஆலோசனைகளைப் பெற்றும் வந்தார்கள். 

குறிப்பாக, தினகரனால் கட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளை சமாளிக்க, அமைச்சர்களே அவரிடம் சென்று ஆலோசனையில் ஈடுபட்டதும் உண்டு. அப்போது குருமூர்த்தி,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குழுவுக்கு சில ஆலோசனைகளை அப்போது வழங்கியதாகவும், அது செயல்படுத்தப் படுவதில் சுணக்கம் காட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

why gurumurthy used impotent word and why jayakumar reacts too much

இத்தகைய நிலையில் தான், ஆர்.கே.நகர் தேர்தல் வந்தது. அதில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் வெற்றி பெற்றார். இதையடுத்து பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தோல்வி குறித்து பெரிதாக அலசப் பட்டது. அந்தக் கூட்டத்திற்குப் பிறகுதான்,  தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட நாஞ்சில் சம்பத், புகழேந்தி, கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஒன்பது பேர்  கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

ஆனால், எப்போது பிரச்னை என்று வந்து, கட்சியும் ஓபிஎஸ்- இபிஎஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததோ, அப்போதே இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் சிலர். அவர்களில் குருமூர்த்தியும் ஒருவராக இருந்திருக்கிறார். ஆனால், தினகரன் ஸ்லீப்பர்செல்கள் அங்கே இருக்கின்றனர் என்று சொல்லும் அளவுக்கு கட்சிக்குள் தங்கள் நபர்களை வளர்த்து விட்டு, இப்போது ஜீரணிக்க இயலாத ஒரு தோல்வியை எடப்பாடிக்கு பரிசளித்து போக்குக் காட்டியிருக்கிறார் தினகரன். 

இத்தகைய சூழலில்தான், தாம் அவ்வளவுதூரம் சொல்லியும் கேட்காமல், கட்சிக்குள் தனக்குத்தானே எதிரிகளை வளர்த்துவிட்டு இப்போது செய்வது அறியாமல் திகைத்து, கடைசிக்கட்டத்தில் ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் இவர்கள் என்ற எண்ணத்தால், பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் கடுமையாக விமர்சித்து குருமூர்த்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், தான் அவ்வாறு ஆலோசனை சொல்பவர் இல்லை என்றும், தான் ஒரு சுயேச்சையான எழுத்தாளர் என்றும், நல்லவேளை இதனை அமைச்சர் ஒப்புக் கொண்டிருக்கிறாரே என்றும் தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். இருப்பினும், கடந்த கால வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் அவ்வாறு இவர் சொல்வதை நம்புவது கடினம்தான்!

அந்த முதல் டிவிட்டிலேயே தனது ஆற்றாமையை, அதே நேரம் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரின் கோழைத்தனத்தை வெளிப்படுத்தி யிருந்தார். இத்தகைய கட்டுரைகளை அவர் தொடர்ந்து எழுதி வருகிறார் என்றாலும், அவர் வெளியிட டிவிட் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு தினகரன் ஆதரவு நிர்வாகிகள் ஒன்பது பேர் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பலவீனமான தலைவர்கள், ஆறு மாதங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர் என பதிவிட்டிருந்தார் குருமூர்த்தி.

why gurumurthy used impotent word and why jayakumar reacts too much

குருமூர்த்தியின் இந்தக் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக பதிலடி கொடுத்தார்.

யார் இந்தக் குருமூர்த்தி. அவருக்கு முகமே கிடையாது. மற்றவர்களை விமர்சனம் செய்ய தடித்த வார்த்தைகளை அவர் பயன்படுத்தக் கூடாது. அவரின் தடித்த விமர்சனத்துக்கு நாங்கள் கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தன்மானத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட மாட்டோம். அதிமுகவினர் காங்கேயம் காளை போல செயல்படுகின்றனர். குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால் அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்திருந்தார். 

இந்நிலையில் நான் உபயோகப்படுத்திய வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அமைச்சர் பேசுவதாகவும் அவருக்கு விளக்கவே இந்தப் பதிவு எனவும் வரிசையாக பதிவிட்டார் குருமூர்த்தி. 

முதலில்Potential என்றால்  ஆற்றல் உள்ள என்று அர்த்தம். அதற்கு எதிர்மறையான து impotent என்கிற வார்த்தை. impotential என்கிற வார்த்தை கிடையாது.  நான் Twitter அனுப்பியது ஆங்கிலத்தில். இதற்கு தமிழில் இன்ன அர்த்தம் என்று கூறி Twitter அனுப்ப முடியாது. 

இரண்டாவது, அவர்களை நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாக. மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்று அர்த்தமே தவிர வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான்.

நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறியதற்கு  ஏற்றவனாவேன்.

நான் சர்வாதிகாரம் படைத்த இந்திரா காந்தி காலத்திலிருந்து எதிர்ப்புகளை சந்தித்தேன். இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் disgrace என்கிற வார்த்தை நாடாளுமன்றத்துக்கு ஏற்றதல்ல. Impotent அல்லது incompetent என்கிற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளலாம் என்று disgrace என்கிற வார்த்தையை உறுப்பினர் வாபஸ் பெற்றார். அதனால் impotent என்பது சாதாரண வார்த்தை.

எனவே நான் டிவிட்டரில் கூறிய impotent என்கிற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்து பரிதாபப் படுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது 

அமைச்சர் அதிமுக அரசு என் மேல் நடவடிக்கை எடுப்பதை நான் வரவேற்கிறேன். எவ்வளவோ அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை நான் பார்திருக்கிறேன். இந்த நடவடிக்கையையும் சந்திப்பேன்.

பத்திரிகைகளில் impotent என்கிற வார்த்தையை சாதாரணம். "Impotent prime minister" என்று கூகிள் செய்யுங்கள் 988 முறைகள் பத்திரிகைகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். செப் 27 அன்று இப்படி தலைப்பு செய்தி கொடுத்தது "Trump deleted tweets that show his impotence"

எனவே அதிமுக அமைச்சர் மட்டுமே impotent என்கிற வார்த்தையை ஆண்-பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல. இத்துடன் நான் கூறியதில் எந்த தவறோ கண்ணிய குறைவோ கிடையாது என்று கூறி முடிக்கிறேன். ..என்று பதில் டிவிட் கொடுத்தார் குருமூர்த்தி. 

ஆனாலும் இந்தப் பிரச்னை ஓயவில்லை. அவரது பதிவுகளுக்கு இன்று புறம்போக்கு என்ற சொல்லைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்தார் ஜெயக்குமார். 

ஆனால், இந்தச் சச்சரவுகள் எல்லாவற்றையும் வெளியில் இருந்து பார்த்து வந்தவர்கள், பாஜக.,வும் அதிமுக.,வும் சண்டையிட்டுக் கொள்ள வேண்டிய தேவை வந்திருக்கிறதோ என்றும், பாஜக.,விடம் இருந்து அதிமுக, விலகி இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதோ என்றும் பேசத் தொடங்கினார்கள். குறிப்பாக, மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அதிமுக., அரசு இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக., சார்புள்ள குருமூர்த்தியை இதுதான் நேரம் என்று  தாக்கிப் பேசினால், எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்து, தங்களை உறுதியானவர்கள் என்று காட்டிக் கொள்ள முடியும் என்று நினைத்துள்ளார் ஜெயகுமார் என்ற கருத்தும் பரவியது. 

உண்மையில், அதிமுக.,வின் எதிர்காலம் சசிகலா குடும்பத்தினர் இல்லாத வகையில்  அமைய வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாட்டில் குருமூர்த்தி இயங்கி வருவதையே அவரது அண்மைக் கால கட்டுரைகளும், கேள்வி பதில் கருத்துகளும், டிவிட்டர் பதிவுகளும் வெளிப்படுத்தி வருகின்றன. 

why gurumurthy used impotent word and why jayakumar reacts too much

இதே காரணத்தால் தான், தினகரனுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து செயல்பட்டு வரும் பாஜக., மூத்த தலைவரான சுப்பிரமணியம் சுவாமி, சசிகலா குடும்ப எதிர்ப்பு அரசியலை யோசிக்கும் குருமூர்த்தியை அவ்வப்போது மயிலாப்பூர் அறிவுஜீவி என்று கிண்டலும் கேலியும் செய்து வருவதும்கூட! 

இப்போது, இருதரப்புமே இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. தான் எதிர்பார்த்தது நடக்காத விரக்தியில் குருமூர்த்தியும், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் விரக்தியில் ஆளும் தரப்பும் அடுத்தடுத்து வார்த்தை யுத்தம் நடத்தி வருகிறார்கள். இதற்கான முடிவு எப்போது யார் மூலம் அமையப் போகிறது என்பதை காலம் தான் தீர்மானிக்கும் போலும்!

Follow Us:
Download App:
  • android
  • ios