எங்களுக்கு வேல் கொடுப்பவர்களின் உணர்வை மதித்து வேலை வாங்கிக் கொள்கிறோம் என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞரணி செயலாளர் உதயநிதி என திமுக தலைவர்கள் கையில் வேலை எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். திமுக தலைவர்களின் இந்த செயலை பாஜக கடுமையாக விமர்சித்துவருகிறது. இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றிலெ பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே திமுகவின் கொள்கை. நாங்கள் யார் மனதையும் புண்படுத்த மாட்டோம். கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொன்ன பெரியாருக்கு குன்றக்குடி அடிகளார் விபூதி கொடுத்தார்.
விபூதி கொடுத்த குன்றக்குடி அடிகளாரின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காகவும் அவருடைய உணர்வை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் பெரியாரே திருநீறை எடுத்துப் பூசிக்கொண்டார். அதேபோலத்தான் வேலைக் கொடுத்தால் நாங்கள் வாங்கிக் கொள்வோம். நாகரிகம் கருதி கொடுப்பவர்களின் உணர்வை மதித்து வேலை வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் வேலை வாங்கி நாக்கிலா குத்திக்கொண்டோம்? கடவுள் இல்லை என்பது பெரியாரின் கொள்கை. ஆனால், எங்களை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்பதை திமுக ஏற்றுக்கொள்கிறது. அவ்வளவுதான்” என்று ஆ. ராசா தெரிவித்தார்.