குருபெயர்ச்சியால் சிலருக்கு குண்டக்க மண்டக்க என்று கால நேரம் பாடாய் படுத்தி எடுக்க துவங்கியிருப்பது இப்போதுதான். ஆனால் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரனுக்கோ கடந்த சில மாதங்களாகவே ஏழரை சனி எம்பி எம்பி ஆட்டம் போடுகிறது. பாவம், மனுஷன் எங்குட்டு போனாலும் கட்டையை போடுறது, காலை வாருவதுமாகவே அவரின் ஜாதகம் அமைந்துவிட்டது. அந்த வகையில் கட்டக் கடைசியாக அவர் நம்பியிருந்த சசிகலாவும் அவரை கழட்டி விடுவதற்கான காரியங்களை கம்பிக்குள் இருந்தே துவங்கிவிட்டதுதான் ஹைலைட்டே. 


இந்த நிலையில் சசிகலா டீமின் சொந்த மண்ணான மன்னார்குடியிலேயே அ.ம.மு.க. நிர்வாகிகள் தினகரனுக்கு எதிரான திசையில் தலைதெறிக்க அ.தி.மு.க.வை நோக்கி ஓட துவங்கியிருக்கின்றனர். இதை கவனித்துவிட்டுதான் தினகரன் குயோமுறையோ என புலம்பத் துவங்கியிருக்கிறார். எஞ்சியிருக்கும் தன் நெருங்கிய அடிப்பொடிகளிடம் ‘கடைசியில சின்னம்மாவும் என்னை விட்டுட்டு போறாங்க பார்த்தியா!’ என்று புலம்பிவிட்டாராம் சிறுபிள்ளையாக.  தினா இப்படி புலம்பும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது? என்று அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது “சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்து, அ.தி.மு.க.வோடு அ.ம.மு.க.வை இணைத்து, ஒருங்கிணைந்த கட்சிக்கு அவரை தலைமையேற்க வைப்பது! கூடவே தினகரனை டோட்டலாக அரசியல் களத்திலிருந்து ஒடுக்கி,ஓரங்கட்டுவது! என இரண்டு நிலைப்பாடுகளை டெல்லி அதிகார மையம் எடுத்திருக்கிறது எனும் பேச்சு கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது. 


இதை அ.தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் பா.ஜ.க.  என அனைத்து தரப்பினரும் மறுத்தாலும் கூட நடக்கும் சம்பவங்களெல்லாம் அதை நோக்கியேதான் இருக்கின்றன. ‘தினகரனை நீங்கள் விலக்கி வைக்க வேண்டும்.’ என்று சசிக்கு டெல்லி தலைமை இட்டிருக்கும் கட்டளையின்படி சசி செயல்பட துவங்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் கடந்த சில மாதங்களாக ஒதுக்கி வைத்திருந்த தன் தம்பி திவாகரனை மீண்டும் லைம் லைட்டுக்குள் வர வைத்திருக்கிறார். தனக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையிலான தூதுவராக திவாகரனைத்தான் சசி நியமித்திருக்கிறார். இனி பேச்சுவார்த்தை நடத்துவது, அ.ம.மு.க.விலிருந்து ஆட்களை இழுத்து வருவது, சசிக்கு தரமான தலைமை பதவி பெற்றுத் தருவது என எல்லாமே இனி திவாகரனின் பொறுப்புதான். 


சசி கொடுத்த அஸைன்மெண்டின் படி மிக குஷியாக களமிறங்கிவிட்டார் திவாகரன். தன்னை டம்மியாக்கிய தனது மருமகன் தினகரனுக்கு எதிராக செம்ம ஷார்ப்பாக வேலையை துவங்கிவிட்டார். முதல் கட்டமாக சசிகலா டீமின் சொந்த ஊரான மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள டெல்டா மாவட்டத்து அ.ம.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வில் கொண்டு வந்து சேர்ப்பது, டெல்டா அமைச்சர்களை கூல் பண்ணுவது இவற்றை துவக்கியேவிட்டார் திவாகரன். எந்தளவுக்கு இதில் வீரியம் காட்டுகிறார் என்றால்....சாவுக்கு துக்கம் கேட்க போன இடத்திலும் கூட அரசியல் செய்கிறார் திவாகரன். சமீபத்தில் அ.ம.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு மாநிலப் பொருப்பாளரும், மன்னார்குடியின் மாஜி எம்.எல்.ஏ.வுமான சீனிவாசனின் மகன் விபத்தில் இறந்து போனார். அந்த துக்கத்தை விசாரிக்க அமைச்சர் காமராஜ் சென்றிருக்கிறார். அந்த இடத்தில் அ.ம.மு.க.வின் அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கத்தை அமைச்சர் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பை உருவாக்கியது திவாகரன் தான். 


அதேபோல் அமைச்சர் காமராஜின் சகோதரர் கனகசபை சமீபத்தில் இறந்துவிட்டார். இதற்கு இரண்டு நாட்களில் துக்கம் கேட்க வந்திருக்கிறார் திவாகரன். அப்போதும் அமைச்சர் காமராஜ், சிவாராஜமாணிக்கம் மற்றும் திவாகரன் ஆகியோர் தனி அறையில் இரண்டு மணி நேரம் ஆலோசித்துள்ளனர். இந்த சந்திப்பை உருவாக்கியதும் திவாகரன் தான். இத்தோடு மட்டுமில்லாமல் அ.ம.மு.க.வின் இன்னும் சில நிர்வாகிகளையும் அமைச்சர் வீட்டுக்கு துக்கம் கேட்க வரச்செய்து, அரசியல் ஆலோசனையை நடத்த வைத்திருக்கிறார் திவாகரன்.  ஆக இவர்கள் அனைவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். கூடியசீக்கிரம் மன்னார்குடி உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தினை சேர்ந்த பல அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் விரைவில் இணைய இருக்கின்றனர். சசி வந்த பின் அவரும், திவாகரனும் மீண்டும் கட்சிக்குள் வருவார்கள். இதையெல்லாம் கவனித்துவிட்டுதான் ‘ஒண்ணு கூடிட்டாங்க, ஒண்ணு கூடிட்டாங்க’ என்று தினகரன் புலம்புகிறார்.” என்றார்கள்.  ஹும்! ஆர்.கே.நகர்ல வின் பண்ணி, ‘தனி ஒருவன்’ ஆக சட்டசபைக்கு செல்லும் தினகரனை உண்மையிலேயே தனி ஒருவன் ஆக்கிட்டீங்களேப்பா!