தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் கேப்டன் வீடு திடீரென பரபரப்புக்குள்ளானது. சுமார் 7.15 மணி அளவில் கேப்டனின் மைத்துனர் சுதீஷ் கேப்டன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அதன் பின்னர் கேப்டன் வீட்டில் இருந்து புறப்பட்ட ஆடி கார் ஒன்று நேராக ராமாவரத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு பறந்தது. வழக்கமாக கேப்டன் தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வது மியாட் மருத்துவமனையில் தான்.


   
கேப்டன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தகவல் அவரது வீட்டிற்கு பாதுகாப்பிற்கு நிற்கும் போலீசார் மூலம் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உளவுத்துறை போலீசார் மியாட் மருத்துவமனைக்கு விரைந்தனர். அவர்கள் அளித்த தகவலே கேப்டன் சீரியஸ் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ காரணம் என்று தே.மு.தி.கவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால் உண்மையில் கேப்டன் உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை. அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியது முதல் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் தற்போதும் இருக்கிறார். அப்படி என்றால் எதற்காக கேப்டன் திடீரென மியாட் மருத்துவமனைக்கு இரவு எட்டு மணிக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு கேப்டனின் மைத்துனர் சுதீஷ், அவரை வழக்கமான உடல் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதாக விளக்கம் அளித்தார்.

ஆனால் இரவு எட்டு மணிக்கு நிச்சயமாக வழக்கமான உடல் பரிசோதனைக்கு யாரையும் அழைத்துச் செல்லமாட்டார்கள் என்று லாஜிக்காக செய்தி சேனல்களில் செய்தியாளர்கள் செய்தி கூறினர். இதனை தொடர்ந்து நமக்கு தெரிந்த வட்டாரங்கள் மூலமாக விசாரித்த போது தான், கேப்டனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்யப்படுவதால் கேப்டன் வீட்டிலேயே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மியாட் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் நேரில் சென்று கேப்டனுக்கு டயாலிசிஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்த போது எதிர்பார்த்த அளவிலான ரிசல்ட் கிடைக்கவில்லை. இதனால் ஏதும் பின்விளைவுகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த மருத்துவர்கள் உடனடியாக மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

டயாலிசிஸ் முடிந்து வழக்கமான  உடல் பரிசோதனைகள் முடிந்தாலும் கூட மருத்துவர்கள் கூறும் வரை தொடர்ந்து விஜயகாந்த் மருத்துவமனையில் தான் இருப்பார் என்று அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.