அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவை வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஏன் அழைக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
“புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து தற்போதுதான் விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதற்குள்ளாகவே இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என மத்திய அரசின் குரலாக மத்திய அமைச்சர்கள் பேசுவதைக் கண்டிக்கிறேன். பெட்ரோல், டீசல் வாகனங்களின் பதிவு கட்டணமும் புதுப்பிக்கும் கட்டணம் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது. மின் வாகனங்களை வாங்க அரசு நிர்பந்திக்க இந்த முறையைக் கொண்டுள்ளது.
வேலூரில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 3-ம் தேதி மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளோம். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவை பிரசாரத்துக்குக்கூட அதிமுகவினர் அழைக்கவில்லை. ஏன் அவர்களைப் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை? சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை விவசாயிகள் எதிர்க்கிறார்கள். விவசாயிகள் எதிர்க்கும் அத்திட்டத்தை தமிழகத்தில் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.” என்று முத்தரசன் தெரிவித்தார்.