தேர்தல், அதுவும் இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சியினர் மொத்தமாக அத்துமீறல்களிலும் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது. வரும் 21 ஆம் தேதி நடக்கவுள்ள விக்கிரவண்டியும் இதற்க்கு விதிவிலக்கில்லை என்றுதான் சொல்லணும்! காஞ்சி போட்டு அயன் பண்ண வெள்ள சொக்கா, பளபளக்கும் கட்சி வேட்டி பந்தாவாக கார்களில் படையெடுக்கும் வெளியூர் கட்சிக்காரர்களைப் பார்த்தும், சர்வ சாதாரணமாக அவர்கள் பணத்தை வாரியிறைப்பதைக் கண்டு உள்ளுர் மக்கள் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி பேரூராட்சி  கரை வேட்டிகள் வளைய வருவதைக் காண முடிகிறது.

களத்தில் முத்தமிழ்ச் செல்வனும், புகழேந்தியும் இருந்தாலும் போட்டி என்னவோபொன்முடிக்கும், அதிமுக அமைச்சர் சிவி சண்முகத்துக்கு இடையில்தான். வன்னியர்களையம், பட்டியல் இந மக்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த தொகுதியில் முக்கிய வேட்பாளர்கள் இருவருமே அந்த வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

அதிமுக வேட்பாளரான முத்தமிழ்ச் செல்வன், அமைச்சர் சி.வி சண்முகத்தின் விசுவாசி. துணை முதல்வர் பன்னீரின் தீவிர விசுவாசியான முன்னாள் ராஜ்யசபா எம்.பி லட்சுமணன் சீட்டுக்காக கேட்டு கடுமையாக போராடினார். பன்னீரும் மல்லுகட்டினார். ஆனால், முதல்வர் எடப்பாடி ஆசியுடன் சண்முகத்தின் விசுவாசி முத்தமிழ்ச் செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் முத்தமிழ்ச் செல்வன் வெற்றியை கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு சி.வி சண்முகம் கரன்சி கட்டுக்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கிறார். கட்சியினருக்கு, கட்சி சாராத உள்ளுர் முக்கிய பிரமுகர்களுக்கு என தனித்தனியாக ஸ்பெஷல் கவனிப்பு நடக்கிறதாம். பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை மண்டபங்களுக்கு அழைத்து, விருந்து வைத்து தனியாக கவனிப்பு நடக்கிறது. இதுபோக, ஓட்டுக்கு 4000 வரை கொடுப்பதற்கு சண்முகம் தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது. கட்சிக்காரர்களை மட்டுமல்ல, எதிர்க்கட்சியில் மண்டை காய்ந்துக்கிடக்கும் நிர்வாகிகளையும் ஸ்பெஷலாக கவனிக்க சொல்லி உத்தரவு போடப்பட்டதாம். அதுமட்டுமல்ல பிரசாரத்திற்கு வரும் வெளியூர் நிர்வாகிகளையும் கவனித்து ஆஃப் பண்ண உத்தரவாம் 

கொஞ்சமும் பசையில்லாத சட்டத்துறை மந்திரியா இருந்துகிட்டு இந்த போடு போடறதை பார்க்கும்போது எங்களுக்கே ஆச்சரியமா இருக்குது என அதிமுகவினரே சொல்லும் அளவிற்கு விக்கிரவாண்டியில் கரன்சி மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அதேநேரம் சீட்டுகேட்டு மூக்குடைப்பட்ட  விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளர் வேலு, பொதுக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.பி.லட்சுமணன், தொழிலதிபர் ஏ.கே.சுப்பிரமணியன் ஆகியோர் சத்தமில்லாமல் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருவது, சண்முகம் தரப்பை அலற வைத்துள்ளது.

ஊருக்குள் அதிமுக வேட்பாளர் ஒட்டுக் கேட்டு என்றாலே ஆரத்தி எடுக்க பெண்கள் கூட்டம் அலைமோதுகிறதாம் காரணம், ஆரத்தி தட்டுக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்களாம். அதுமட்டுமல்ல ஒட்டுக்கேட்டு வேட்பாளரோடு சென்றால் 500 ரூபாய், சாயங்காலம் குவாட்டர், மதியானம் பிரியாணி பொட்டலம் என கவனிப்பு பலமாக இருக்கிறதாம். என்ன செய்வது சொல்லிக்கொள்ளும்படியாக வேலை வெட்டி இல்லை, விவசாயமும் இல்லாததால், கூலி வேலையின்றி இருக்கும் மக்களும் ஆவலோடு இடைத்தேர்தல் திருவிழா கொண்டாடி வருகின்றனர்.

ஆளுங்கட்சியின் பணபலத்திற்கும் கவனிப்பிற்கும் ஈடுகொடுக்க முடியாவிட்டாலும் தொண்டர்களின் படைபலத்தைக் கொண்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது திமுக. பொன்முடி தலைமையில் ஆ.ராசா, எம். ஆர்.கே பன்னீர் செல்வம், எ.வ.வேலு,பிச்சாண்டி, ஜெகத்ரட்சகன், தா.மோ. அன்பரசன் ,டி எம் செல்வகணபதி என ஒரு பெரும் பட்டாளமே புகழேந்திக்காக  வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கியுள்ளது. மிகவும் எளிமையானவர், எல்லோரிடமும் நட்பு பாராட்டுபவர் என்பதெல்லாம் புகழேந்திக்கு பிளஸ் பாயிண்டுகள்.  

அடுத்துவரும் நாட்களில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி என ஓட்டு வேட்டைக்காக விஐபிக்கள் தொகுதிக்குள் படையெடுக்க இருக்கின்றனர். தொகுதி முழுக்க கிராமப்புற மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்ற போதிலும்…மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

அன்னியூரைச் சேர்ந்த விவசாயியான காமராஜ் என்பவர்;  எங்க ஊருக்குள்ள கடந்த ஒரு வாரமா நாங்க நெனச்சி கூட பார்க்காத விஷயங்கள் நடக்குதுங்க... இதுவரை எங்களை திரும்பிப் பார்க்காத மந்திரிங்க எல்லாம் இப்ப எங்களையே சுத்தி சுத்தி வர்றாங்க. கேட்காமலேயே தர்றாங்க. ஏன் தர்றாங்க, இது யார் வீட்டுப் பணம் அப்படிங்கறதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன!  என நெத்தியடியாகச் சொன்னதை… விக்கிரவாண்டி மக்களின் தெளிவுக்கு ஒரு அடையாளமாகவே சொல்லப்படுகிறது.