மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்ட தலைவர் யார் என்ற கேள்வி அதிமுகவில் எழத்தொடங்கியிருக்கிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக படும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. ராணுவ கட்டுப்பாடு உள்ள கட்சி, ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற பழங்கதைகள் எல்லாம் ஜெயலலிதா மறைவோடு மாயமாகிவிட்டன. எப்போது ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினாரோ, அப்போது முதலே அக்கட்சிக்கு சோதனைக் காலம் தொடங்கிவிட்டது.
பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு, அதிமுகவில் இரு பிளவு, கூவத்தூர் காட்சிகள், சசிகலாவுக்கு சிறை, தினகரனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி, இபிஎஸ் - ஓபிஎஸ் இணைப்பு, 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், தினகரனின் தனி அணி, மனங்கள் இணையாத நிர்வாகிகள், தேர்தல் தோல்வி, மத்திய அமைச்சரவையில் சேர முடியாதது என ஈராண்டுகளில் ஓராயிரம் பிரச்சினைகளை அக்கட்சி சந்தித்துவிட்டது. ஒரே ஒரு ஆறுதல், மெஜாரிடிக்குத் தேவை 9 எம்.எல்.ஏ.க்கள் என்ற நிலையில், அதை தேர்தல் மூலம் வென்றது மட்டுமே.


இன்னும் ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஆட்சியை நடத்தலாம் என நினைக்கும் வேளையில், ஒற்றைத் தலைமை குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குரல் எழுப்பிவருவது தலைமை மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ராஜன் செல்லப்பாவைத் தொடர்ந்து குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் இக்கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தக் கருத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மட்டுமல்ல, நிர்வாகிகள் மத்தியிலும் ஆதரவு கூடலாம்.


ஒற்றை தலைமையை அதிமுகவில் வலியுறுத்தத் தொடங்கியிருக்கும் வேளையி, யார் அந்த ஒற்றைத்  தலைமை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதுவும் ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் என்று ராஜன் செல்லப்பா அடிகோட்டிட்டு காட்டி பேசியிருப்பது பூடாகமாக அமைந்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருமுறை தொடர முடியாமல் போனபோது, முதல்வராக ஆனவர் ஓ.பன்னீர்செல்வம்தான். அதுமட்டுமல்ல, ஜெயலலிதா மறைந்த பிறகும் முதல்வரானதும் ஓ.பன்னீர்செல்வம்தான். 
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இரு முறை முதல்வரானது பன்னீர்செல்வம்தான். அதுமட்டுமல்ல, ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளையில், அவர் வகித்து வந்த துறைகள் கைமாறியது ஓ.பன்னீர்செல்வத்திடம்தான். அந்த வகையில் பார்க்கும்போது, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம் என்றே எண்ணத்தோன்றுகிறது. தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்திருந்தாலும், அதன் பின்னணியில் இருந்தது சசிகலா என்பது எல்லோரும் அறிந்து சங்கதிதான்.

 
ராஜன் செல்லப்பாவின் கருத்தின்படி பார்த்தால், ஓ.பன்னீர்செல்வத்தை மனதில் வைத்து குறிப்பிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. யார் அந்தத் தலைமை என்பதை அதிமுக பொதுக்குழுவில் வெளிப்படுத்த தயார் என்று ராஜன் செல்லப்பாவே தெரிவித்துவிட்டார். அடுத்ததாக, அதிமுக பொதுக்குழு கூடும் வரை, அந்த ஒற்றை தலைமை யார் என்பது அதிமுகவினர் மத்தியில் கேள்வியாக எழுந்துகொண்டேயிருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.