Kovai Mayor : கல்லூரி மாணவி.. முன்னாள் கவுன்சிலர்.. துணை மேயர் மனைவி..இந்த 3 பேரில் கோவை ‘மேயர்’ யார் ?
கோவை மாநகராட்சி மேயராக யார் வருவார் ? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் எழுந்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் கோவையைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கு பதில், கரூரைச் சேர்ந்த திமுகவினரை களத்தில் இறக்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் என 3, 366 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மற்ற இடங்களில் திமுக வென்றாலும், கோவையில் அதிமுகவுக்கே வெற்றி கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு பேரூராட்சியை தவிர, 100 வார்டுகளைக் கொண்ட கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 32 பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில், கவுண்டம்பாளையம் தொகுதியில் 22 வார்டுகள், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 19 வார்டுகள், முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் கோட்டை எனப்படும் தொண்டாமுத்தூர் தொகுதியில் 14 வார்டுகள், கிணத்துக்கடவு தொகுதியில் 7 வார்டுகள் வருகின்றன.
அதிமுக பலமுள்ள இப்பகுதிகளில், எளிதாக வெல்வர் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பலரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர். நேற்றிரவு 9. 30 மணி நிலவரப்படி கோவை மாநகராட்சியில் 90 இடங்கள், நகராட்சிகளில் 167 இடங்கள், பேரூராட்சிகளில் 408 இடங்கள் என கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சியில் இது வரை மேயர் பதவியை திமுக பிடித்தது கிடையாது. இந்நிலையில் இந்த முறை கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான மாநகராட்சி தேர்தல் முடிவுகளில் திமுக தனிப் பெரும்பான்மையுடன், வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் திமுக சார்பில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் மேயர் பதவியைக் கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கின்றது. தற்போது மேயருக்கான பந்தயத்தில் மூன்று பேர் முன்னிலையில் இருக்கின்றனர்.
அதில் முதலில் இருப்பவர் 52 வது வார்டு உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா. கார்த்திக்கின் மனைவி. இலக்குமி இளஞ்செல்வி ஏற்கனவே கவுன்சிலராக இருந்துள்ளார். மேலும் அவரது கணவர் நா. கார்த்திக் துணை மேயராகவும் இருந்துள்ள நிலையில் அவருக்கு மேயர் பதவிக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல மற்றொருவர் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சேனாதிபதியின் மகள் நிவேதா. 97 வது வார்டில் வெற்றி பெற்றுள்ள 22 வயதான இளம் கவுன்சிலரான நிவேதா மேயராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக திமுகவினர் மத்தியில் பேசப்படுகின்றது. காரணம் இவரது அப்பா சேனாதிபதி உதயநிதியின் தீவிர ஆதரவாளர். அதனால் தனது மக்களுக்கு மேயர் சீட் வேண்டும் என்று தலைமைக்கு தூது அனுப்பியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இவர்களை தவிர வார்டில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட மீனா லோகு. இவர் ஏற்கனவே கவுன்சிலராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதுடன், திமுக மாநில மகளிரணி துணை செயலாளராகவும் இருந்தவர்.
கோவையில் கடந்த முறை திமுக கவுன்சிலர் ஆக இருந்த பொழுது அதிமுகவிற்கு எதிராக போராட்டங்களை மாநகராட்சி மன்றத்தில் நடத்தியதற்காக, மன்றத்தில் வைத்தே அதிமுக கவுன்சிலர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர். தற்போது இந்த மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மேயராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.