அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என பேசப்படுவதெல்லாம் திட்டமிட்ட நாடகம் என்று கர்நாடகா மாநில அமமுக செயலர் புகழேந்தி கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் வெளிப்படையாகத் தெரிவித்தார்கள். இதைப் பற்றி ஆலோசனை நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்கள். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கூட்டத்துக்கு அதிமுக ஏற்பாடு செய்தது. பின்னர் ஒற்றைத் தலைமை குறித்து இனி யாரும் பேசமாட்டார்கள் என்று அமைச்சர்கள் பேட்டி அளித்தனர்.
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து பேசுவது திட்டமிட்ட நாடகம் என்று கர்நாடகா மாநில அமமுக செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து விட்டோம் எனச் சொல்வதை ஏற்க முடியாது. தினகரன் தலைமைக்கு தோல்வி என்பதையும் ஏற்க முடியாது. தமிழகத்தில் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக அமமுக வந்துள்ளது. பரிசுப் பெட்டி சின்னத்தை குறுகிய காலத்தில் மக்களிடம் எடுத்துச் சென்ரிருக்கிறோம். சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் 7 சதவீதம் ஓட்டுகளைத் தனியாகப் பெற்றிருக்கிறோம்.
ஜெயலலிதா இருந்தபோது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 44 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், இப்போது அதிமுகவுக்கு 18 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார். இப்படி பேசுவது திட்டமிட்ட நாடகம்.

 
தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்துபோன விஷயம் மக்களிடம் போய் சேராமல் இருப்பதற்காக திசை திருப்ப பார்க்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர் ஆகியேர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். அதிமுகவுக்கு ஒரே தலைமையாக எதிர்காலத்தில் சசிகலா தலைமை ஏற்பார். தமிழகத்தைப் பொறுத்தவரை டிடிவி தினகரன் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.” என்று தெரிவித்தார்.