ராகுல் காந்திக்கு மாற்றாக பிரியங்காவை தலைவராக்க சில தலைவர்கள் முயற்சி மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது முறையாக அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் போனது. தேர்தலுக்கு முன்பாக உ.பி.யை மனதில்கொண்டு பிரியங்காவை தீவிர அரசியலில் இறக்கிய ராகுல், அவரை கிழக்கு உ.பி. பொதுச் செயலராகவும் நியமித்தார். தனது பாட்டிய் இந்திராவின் சாயலில் இருக்கும் பிரியங்கா காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பார் என்றும். உ.பி.யில் அக்கட்சிக்கு வெற்றியைத் தேடி தருவார் என்றும் பார்க்கப்பட்டது.


ஆனால், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான அமேதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சித் தலைவர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்துவிட்டார். அவருடைய முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் உறுதியாக இருக்கும்பட்சத்தில், அடுத்த தலைவரை தேர்வு செய்யும் முயற்சிகளும் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 
ராகுலுக்கு மாற்றாக பிரியங்காவை கட்சி தலைவராக்கலாம் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் யோசனையை முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு கட்சியில் உள்ள சீனியர் தலைவர்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ராகுலுக்கு மாற்றாக பிரியங்காவை தலைவராக்கும் முயற்சிக்கு சீனியர் தலைவர்கள் மத்தியில் ஆதரவு இல்லாததால், அந்த யோசனை அப்படியே கிடப்பதாகவும் கூறப்படுகிறது. தீர்க்கமான முடிவை எடுத்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.