பாட்டாளி மக்கள் கட்சியின் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய காடுவெட்டி குரு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் இறந்தார். இந்த மரணத்துக்குப் பின் வன்னியர் சமுதாயத்தின் கணிசமான மக்கள் ராமதாஸ் தரப்புக்கு எதிராக திரும்பினர். காரணம்? குருவின் ரத்த சொந்தங்கள், அவரது மரணத்துக்கு டாக்டர் ராமதாஸின் குடும்பமே காரணம்! எனும் ரீதியில் பேசியதுதான். 
இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. மிக கடுமையான தோல்வியை சந்தித்திருக்கிறது. 2009 எம்.பி. தேர்தலில் அன்புமணியாவது ஜெயித்தார். ஆனால் இம்முறை அவரும் தோற்றார். ஆக, வன்னியர் வாக்கு வங்கியே தங்களின் கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லை என்பதை ராமதாஸ் புரிந்து கொண்டார். 

எனவே மகனை ராஜ்யசபா வழியே எம்.பி. ஆக்கிய கையோடு, தனது கட்சியை பலப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் தங்களிடமிருந்து பிரிந்து போன பழைய ஆளுமைகளை மீண்டும் பா.ம.க.வுக்குள் இழுக்க துவங்கியிருக்கிறார். அந்த ரூட்டில் அ.தி.மு.க.வில் இருந்து தீரன் வந்துவிட்டார்.  அடுத்து, குருவின் ஆதரவாளர்களை அமைத்திப்படுத்துவதற்கான பணிகளில் இறங்கியவர் சமீபத்தில் அவரது மணி மண்டபத்தை திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசுகையில் ‘காடுவெட்டி குருவை கொல்ல திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த பெரியவர்கள்  முயன்றனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.’ என்று ஒரு பட்டாசை கொளுத்திப் போட்டார்.

 

இது தாறுமாறாக வெடித்துள்ளது  அரசியலரங்கில். டாக்டரின் இந்த பேச்சுக்கு மிக வலுவான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறது தி.மு.க. ஒரு காலத்தில் பா.ம.க.வின் மாநில தொழிற்சங்க தலைவராக இருந்துவிட்டு பிறகு தி.மு.க.வில் இணைந்திருக்கும் கோட்டைக்காடு ஞானமூர்த்தி “குருவைக் கொல்ல தி.மு.க. முயன்றதாக ஒரு பெரும் பொய்ப் பழியை சுமத்தியிருக்கும் டாக்டர், கடந்த கால வரலாற்றை கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும். வன்னியர் சங்கத்தை சேர்ந்த ஏழுமலையை கொன்றது யார்? வல்லம் அறிவழகனை கொன்றது யார்? பெரியதத்தூர் வெங்கடேசனை கொன்றது யார்? இந்த கொலைகள் மட்டுமா! சில கொலை முயற்சிகளும் உள்ளன. 

வன்னிய அடிகளார் தாக்கப்பட்டது யாரால்? பண்ருட்டி ராமச்சந்திரன் தாக்கப்பட்டது யாரால்? இவ்வளவு ஏன்? தற்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்யச் சென்று, அவரது உறவினரைக் கொன்றது யார்?ராமதாஸை அரசியல் உலகம் அறியச் செய்த வாழப்பாடியாரை  வஞ்சகத்தில் வீழ்த்தியது யார்? இப்படி வன்னியர்களை அழிக்கவே வன்னியர் சங்கம்! ஒரு ஜாதி தலைவரே தனது ஜாதி மக்களை அழித்தது எந்த ஜாதியில் நடந்துள்ளது? பா.ம.க.வில் மட்டுமேதான். ” என்று போட்டுப் பொளந்துள்ளார். பா.ம.க.விடமிருந்து இதற்கு என்ன பாய்ச்சல் பதிலடி வருமோ!?