நீர்வளத்துறை திட்ட பணிகளில் களப்பணியாளர் முதல் அதிகாரிகள் வரை யார் முறைகேடு செய்தாலும் தயவுதாட்சண்யம் பார்க்காமல் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக பொதுப்பணித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் மேம்பாலம்,  கட்டிடங்கள் உள்பட பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த திட்ட பணிகளில் பெரும்பாலானவற்றை கமிஷனுக்காக வேண்டும் என்றே அதிகாரிகள் முடிக்காமல் காலம் தாழ்த்துவதாக பலதரப்பு மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். 

இந்நிலையில், இதுகுறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. 

அப்போது, குடிமராமத்து திட்டத்தில் ஏரிகள் புனரமைப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனவும் உடனடியாக இந்த பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோடை காலத்திற்குள் இந்த பணிகளை முழுவதுமாக முடித்திருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் சீட்டில் அமர்ந்து கொண்டு திட்ட அறிக்கை தயார் செய்கிறீர்கள் எனவும் முதலமைச்சர் பேசியதாக தெரிகிறது. 

இது போன்ற செயல்களில் இனியும் ஈடுபடக்கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் யாராக இருந்தாலும் சஸ்பெண்ட் தான் எனவும் எச்சரிக்கை விடுத்ததாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 இனிமேல் அதிகாரிகள் கையில் எந்த அறிக்கையும் வைத்து இருக்க கூடாது எனவும் ஒவ்வொரு செயற்பொறியாளர்ளும் பணிகளை முறையாக செய்ய தவறினால் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 அதிகாரிகள் சிலரின் தவறான நடவடிக்கையால் தான் பொதுப்பணித்துறை பெயர் கெட்டு போய் உள்ளதாகவும் இனி யாரும் இந்த துறை குற்றம்சாட்டும் அளவுக்கு அதிகாரிகள் நடக்க கூடாது எனவும் முதலமைச்சர் பேசியதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன.