who is the opposite parties candidate for president election
ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் பீகார் மாநில ஆளுநர் ராம் நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகளோ தொடக்கத்தில் இருந்தே, மதச்சார்பற்ற ஒரு வேட்பாளர்தான் நிறுத்தப்பட வேண்டும், மதச்சார்புடைய வேட்பாளர் நிறுத்தப்பட்டால் ஆதரிக்கமாட்டோம், போட்டி வேட்பாளரை நிறுத்துவோம் எனக் கூறி வந்தன. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில், தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
நாட்டின் உயர்ந்த பதவிக்கு ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வு செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்ற எண்ணத்தில் பா.ஜனதா சரியாக காய்நகர்த்தி கோவிந்த்தை தேர்வு செய்துள்ளது.
ஆனால், தலித் சமூகத்தை சேர்ந்தவராக ஆளுநர் கோவிந்த் இருந்தபோதிலும், ஆர்.எஸ்.எஸ். கூடத்தில் பட்டை தீட்டப்பட்டு, பாஜனதாவில் வளர்ந்தவர். ஆதலால், இவரை எதிர்க்கட்சிகள் ஆதரிக்குமா, அல்லது போட்டி தலித் வேட்பாளரை நிறுத்துமா? என்பது தெரியவில்லை.
இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், “ எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டி வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது வேட்பாளர் நிறுத்த வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க வரும் 22ந் தேதி கூட இருக்கிறோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.
