முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தமிழக பொறுப்பு ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், அடுத்த முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினகரன் ஆதரவு எம்எம்ஏக்கள் 19 பேர் நேற்று ஆளுநர் மாளிகையில் வித்யா சாகர்ராவை வந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து புதுச்சேரி சென்ற அவர்கள் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக  யாரை புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனை நடத்தினர்.

சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் அல்லது செம்மலை ஆகியோரில் யாராவது ஒருவரை  புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.

சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க வேண்டும் என நேற்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டி அளித்திருந்த நிலையில், தற்போது டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் சபாநாயகர் தனபால் முதலமைச்சராக வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள்.