New CM of UP
உத்தரப் பிரதேச பா.ஜனதா முதல்-அமைச்சர் யார்?
7 பேர் பெயர்கள் பரிசீலனை

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சியின் புதிய முதல்-அமைச்சர் பதவிக்கு மாநில தலைவர் கேசவ் மவுரியா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
15 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
முதல்வர் வேட்பளர்
இந்த தேர்தலின்போது முதல்-அமைச்சர் வேட்பாளராக பா.ஜனதா யாரையும் முன் நிறுத்தவில்லை. இந்த அணுகுமுறையும் ஒரு விதத்தில் பா.ஜனதாவின் வெற்றிக்கு கை கொடுத்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ஏன் என்றால், எந்தவித எதிர்பார்ப்பும், கோஷ்டி மனப்பான்மையும் இன்றி, அனைத்து தலைவர்களும் இந்த தேர்தலில் ஒன்றுபட்டு பிரசாரம் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது.
எந்த வகுப்பை சேர்ந்தவர்?
யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் முற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஒன்று திரட்டி மேற்கொள்ளப்பட்ட பிரசாரம், பா.ஜனதாவுக்கு வெற்றி தேடித்தந்து உள்ளது.
எனவே யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவர் முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் கங்வார்
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அடிப்படையில், தற்போதைய மாநில பா.ஜனதா தலைவர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் பைரேலி எம்.பி.யுமான சந்தோஷ் கங்வார் ஆகியோர் முதல் இடத்தில் உள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத் பின்னணியைக் கொண்ட கேசவ் மவுரியா மிகவும் பிற்படுத்தப்பட வகுப்பை சேர்ந்தவர். உ.பி.யில் இதுவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யாரும் முதல்வராக இருந்தது இல்லை.
பாரம்பரிய ஆதரவு
எனவே மவுரியா தேர்வு செய்யப்பட்டால், பல ஆண்டுகளுக்குப்பின் பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து உ.பி.க்கு மீண்டும் ஒரு முதல்வர் கிடைக்க இருக்கிறார். மாறாக, சந்தோஷூ கங்வார், கடந்த 1989-ம் ஆண்டில் இருந்ததே எம்.பி.யாக இருந்து வருகிறார்.
2009-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே அவர் தோல்வி அடைந்து இருக்கிறார். மென்மையாக பேசும் இயல்பு கொண்ட கங்வார் குர்மி இனத்தை சேர்ந்தவர். இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ரோகல்காண்ட் பிராந்தியத்தில் பாரம்பரியமாக பா.ஜனதாவை ஆதரித்து வந்துள்ளனர்.
மகேஷ் சர்மா
முற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவை எடுத்துக்கொண்டால் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா முதல் இடத்தில் வருகிறார். நொய்டா பகுதியை சேர்ந்த டாக்டரான இவர், சங் பரிவார் அமைப்புடன் நெருக்கம் கொண்டவர்.
தகவல் தொடர்பு அமைச்சரும், காஜியாப்பூர் எம்.பி.யுமான மனோஜ் சின்கா, இந்தப் பிரிவில் பரிசீலனையில் இருக்கும் மற்றொருவர் ஆவார். பனாரஸ் இந்து பல்கலைக்கழக பட்டதாரியான சின்கா, எண்ணிக்கையில் மிகவும் குறைவான பூமிகார் சமூகத்தை சேர்ந்தவர்.
உமாபாரதி
முதல்-அமைச்சர் வேட்பாளர் தேர்தல் களத்தில் மத்திய மந்திரி உமாபாரதியும் உள்ளார். இவர் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஆவார்.
தற்போதைய முதல்- அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இவர் உத்தரபிரதேச அரசியலில் களம் இறக்கப்பட்டார்.
கல்ராஜ் மிஸ்ரா
பிராமணர் சமூகத்தை சேர்ந்த மத்திய அமைச்சரான கல்ராஜ்மிஸ்ராவின் பெயரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நல்ல அனுபவம் உள்ளது.
இறுதியாக, சர்ச்சைக்குரிய கோரக்பூர் தொகுதி எம்.பி.யான யோகி ஆதித்யநாத்தின் பெயரும் அடிபடுகிறது. பிராந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
ராஜ்நாத் சிங்
உ.பி. மாநில முன்னாள் முதல்-அமைச்சராக பதவி வகித்த தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பெயரும் முதலில் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதால் பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இறுதியாக, பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா ஆகிய இருவரும் சேர்ந்து தேர்வு செய்யும் ஒருவர்தான், பா.ஜனதா ஆட்சி மன்ற குழுவில் உ.பி. முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
