தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் எப்போது அறிவித்தாலும் அதை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. கன்னியாகுமரி வேட்பாளர் குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும்.  வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்களும் விவசாயிகளும் திமுகவுக்கு தோல்வியை தர தயாராகிவிட்டனர். விடியலுக்கான வெளிச்சத்தை கொண்டு வரப்போவதாக ஸ்டாலின் கூறுகிறார். 2011-க்கு முன்பு தமிழகத்தை திமுக எப்படி சீரழித்தது என்பது அனைவருக்கும் தெரியும். 2011-ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழகம் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆனது.


திமுகவினர் நிலங்களையெல்லாம் எப்படி அபகரித்தார்கள் என்பதும் தெரியும். தமிழக அரசால் நில அபகரிப்புக்கென தனி பிரிவே உருவாக்கப்பட்டது. திமுக பேசும் பெண் பாதுகாப்பு எல்லாம் பேச்சோடுதான் உள்ளது. அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பூங்கோதை ஆலடி அருணாவுக்கே அந்தக் கட்சியில் பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த முதல்வரின் ஆட்சி நடைபெறுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி தொடரும்.


காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. திமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் மு.க. ஸ்டாலினா, கனிமொழியா, உதயநிதியா என்பதும் தெரியவில்லை.  நடிகர் ரஜினி தேசியத்தையும் தெய்வீகத்தையும் நம்புகிறவர். ஆன்மீகத்தை எடுத்து செல்பவர். அவருடைய ஆதரவு நிச்சயம் பாஜகவுக்கு கிடைக்கும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.