நிர்மலா சீதாராமனா.? தமிழிசையா.? புதுவையில் களம் இறங்கப்போவது யார்.? பாஜக பட்டியலில் காத்திருக்கும் ட்விட்ஸ்ட்
நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளரை இறுதி செய்யும் பணி தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில் தமிழிசை மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
தீவிரமடையும் தொகுதி பங்கீடு
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக தனது வேட்பாளர்களை இறுதி செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகம் புதுச்சேரியில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்கள் தொடர்பாக எந்தவித பெயரையும் பாஜக இதுவரை வெளியிடவில்லை. இரண்டாம் கட்ட பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஒரு சில வேட்பாளரின் பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் புதுவையில் என். ஆர். காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.
புதுவை தொகுதியில் பாஜக போட்டி
எனவே நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வரும் என் ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை பாஜக தேசிய தலைவர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ரங்கசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதாகவும், பாஜக சார்பாக யார் வேட்பாளராக போட்டிடுவார்என்ற தகவலை பாஜக மேலிடம் விரைவில் வெளியிடும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பாஜக சார்பாக யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழிசையா.? நிர்மலாவா.?
அந்த வகையில் பாஜக சார்பாக மூன்று பேர் பெயர் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பாஜக சார்பாக நிர்மலா சீதாராமன் அல்லது தமிழிசை பெயர்கள் இறுதி கட்ட பரிசீலனையில் இருப்பதாகவும் இரண்டாம் கட்ட பட்டியலில் பெயர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி.!