பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாகப் பேசிய வழக்கில் கைதாகியுள்ள நெல்லை கண்ணன் திமுக தலைவராக இருந்த கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர், அதிமுகவுக்காகப் பிரசாரம் மேற்கொண்டவர் என பல முகங்கள் உண்டு.


 குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ‘ஜோலியை முடிப்பீங்க’ என்று பேசிய காரணம் உள்பட 3 பிரிவுகளில் போலீஸார் கைது செய்துள்ளனர். யார் இந்த நெல்லை கண்ணன்  என்ற தகவல் இந்தத் தலைமுறையினருக்கு தெரிந்திருக்காது. காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன். இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். கம்பர் ராமாயணத்தைக் கரைத்து குடித்தவர். ஆன்மிக சொற்பொழிவில் பேசும்போதே அவன், இவன் என்று விளித்துதான் நெல்லை கண்ணன் பேசுவார். கம்பர் ராமாயணத்தில் ராமன், ராவணனையும் அவன், இவன் என்றே பேசக்கூடியவர்.


 நெல்லையில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கோடு இருந்த நெல்லை கண்ணன், 1996-ம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, அங்கே போட்டியிட காங்கிரஸில் பலரும் தயங்கிய நேரத்தில் நெல்லை கண்ணன் போட்டியிட்டார். அவருக்காக ஜெயலலிதா பிரசாரமும் மேற்கொண்டார். எனினும் அந்தத் தேர்தலில் நெல்லை கண்ணன் தோல்வியடைந்தார்.


இதேபோல 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தவர் நெல்லை கண்ணன்.  அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நெல்லை கண்ணன் ‘அதிமுகதான் சிறந்த கட்சி; ஜெயலலிதாதான் சிறந்த தலைவர்’ என்று அளித்த பேட்டியால், போயஸ் கார்டனுக்கு நெல்லை கண்ணனை வரவழைத்து ஜெயலலிதா பேசினார். இதனையடுத்து 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சென்று அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார். அதற்கான செலவுகள் அனைத்தையும் அதிமுகவே ஏற்றுக்கொள்ளும் என்று அப்போது அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.