மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி MLA வாக இருந்த திருவாரூர் தொகுதிக்கு வரும்  28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 10-ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில், முந்திக்கொண்டு மன்னார்குடி குடும்ப விஸ்வாசியான எஸ்.காமராஜை வேட்பாளராக அறிவித்தது அமமுக, இதனையடுத்து இன்று மாலை திமுகவும் கருணாநிதியின் தீவிர விசுவாசியான பூண்டி கலைவாணனை வேட்பாளராக அறிவித்தது.

டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரிய திகழும் இந்த எஸ்.காமராஜ் யார்?

மன்னார்குடியைச் சேர்ந்த எஸ்.காமராஜ் பிரபலமான தரணி கல்வி குழுமத்தையும், தரணி கன்ஸ்டரெக்ஷனையும் நடத்திவருகிறார். 

1981-ஆம் ஆண்டு அதிமுகவில் உறுப்பினரான இவர். மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக ஒருமுறையும், ஒன்றியக்குழு உறுப்பினராக ஒருமுறையும் பதவி வகித்துள்ளார். 

கடந்த 2002-ஆம் ஆண்டு மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்த ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தோடு மிகவும் நெருக்கத்தோடு இருக்கும் இருந்ததால்  16 மாதங்களில் அவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு  அமைச்சர் ஆர்.காமராஜிடம் கொடுத்தார். 

இதனையடுத்து சசிகலா குடும்பத்தின் சிபாரிசால், 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான டி.ஆர்.பி.ராஜாவிடம்  தோல்வியைத் தழுவினார்.  

இதனையடுத்து, ஜெயலலிதா மறைவை அடுத்து, எடப்பாடி அணியில் இருந்த இவர் அதிமுக இரண்டாகப் பிரிந்ததும். தினகரனுக்கும் ஆதரவாக சென்றதால். அமமுகவில் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. 

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் நன்கு அறிமுகமானவராகவும், அனைத்து அரசியல் கட்சியினரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருப்பதனாலும், கடந்தமுறை டிஆர்பி ராஜாவிடம் இவர் தோற்றது வெறும் 8,200  வாக்குகள் தான், எனவே  எப்படியும் இவர் ஜெயித்துவிடுவார் என்பதால் தினகரன் இவரையே வேட்பாளராக்கியிருக்கிறார்.


யார் இந்த கலைவாணன்?

பூண்டி கலைவாணன் கடந்த 13 ஆண்டுகளாகத்தான்  திமுகவில் இருக்கிறார்.  கடந்த 2007ல் இவர் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முன்பு திமுக மாவட்டச் செயலாளராக இருந்தவர் பூண்டி கலைச்செல்வன்.  இவரது சகோதரர் தான்  கலைவாணன்.

கடந்த 2007ம் வருடம் அரசியல் பகை காரணமாக பூண்டி கலைச்செல்வன் கொலை செய்யப்பட்டதால், அவரது சகோதரர் பூண்டி கலைவாணன் அந்த இடத்திற்கு வந்தார். திமுக மாவட்டச் செயலாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டார்.  கடந்த இரண்டுமுறையும் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதால் திருவாரூர் தொகுதியில் கருணாநிதி நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்த தொகுதியை இரண்டு முறையும்  விட்டுக் கொடுத்தவர். இந்தமுறையும், இவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிட  ஸ்டாலினுக்காக இவர் விருப்பமனுவும்  தாக்கல் செய்தார்.


மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் நின்ற இரண்டு தேர்தலிலும் பூண்டி கலைவாணன் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்தவர். இதன் காரணமாகவே இவர் கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானார்.   ஆனால் இவரின் தீவிர உழைப்பிற்கு பரிசாக திமுக சார்பாக போட்டியிடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

திருவாரூரில் திமுகவை மிகவும் வலுவான கட்சியான மாற்றியதில் பூண்டி கலைச்செல்வன் மற்றும் பூண்டி கலைவாணனுக்கு பெரிய பங்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல கருணாநிதி அந்த தொகுதியில் வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற பூண்டி கலைவாணன் காரணம் என சொல்லப்பட்டதாலும், கருணாநிதியின் குடும்பத்தின் மீது உள்ள விஸ்வாசத்தாலும் முதல்முறையாக கருணாநிதி MLA வாக இருந்த தொகுதியை கொடுத்துது திமுக.