Who is Boise home? The court notices

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து, அவரின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, வேதா இல்லத்தை அரசுடமையாக்க தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து, ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் நாங்கள்தான் என்றும், எனவே போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றக்கோரிய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

எனது பாட்டி சந்தியாவின் மறைவுக்குப் பிறகு இந்த வீடு அத்தை ஜெயலலிதா பெயருக்கு மாற்றப்பட்டது. நானும் எனது தம்பி தீபக்கும்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனால் எனது கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை. எனவே, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த தமிழக அரசின் உததரவை ரத்து செய்ய வேண்டும் என்று தீபா அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின்போது, தமிழக அரசின் தலைமை செயலாளர், பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை சார்பில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.