அடுத்த பிரதமர் ரேஸில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் பிரதமர் பதவி குறித்து மனம் திறந்திருக்கிறார் நிதின் கட்கரி.
முன்னாள் பாஜக தலைவர் நிதின் கட்காரி ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர். தன் மனதில் படும் விஷயங்களை பட்டென்று பேசிவிடுவார். இது பல சமயங்களில் சர்ச்சையாகவும் மாறியிருக்கின்றன. அண்மைக் காலமாக பிரதமர் பதவிக்கு நிதின் கட்கரி பெயரும் பலமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மிகவும் நெருக்கமான நிதின் கட்கரியை அந்த அமைப்பும் பிரதமராக வர விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிரதமர் பதவி குறித்து வெளியாகும் தகவல்கள் தொடர்பாக மனம் திறந்திருக்கிறார் நிதின் கட்கரி. டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிதின் கட்கரி இதுதொடர்பாக பேசினார்.
 “பிரதமர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டதே கிடையாது. அதற்கான போட்டியிலும் நான் இருந்ததே கிடையாது. அந்தப் பதவிக்குத் தகுதியானவர் நரேந்திர மோடி மட்டுமே. எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. இதுபோன்ற கேள்விகள் எப்படி எழுகின்றன என எனக்கு தெரியவில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலைபோல இந்த முறையும் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறும். மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பார். அவருடைய தலைமையின் கீழ் அமைச்சராகப் பணிபுரியவே நான் விரும்புகிறேன். நான் உண்மையான ஆர்.எஸ்.எஸ். தொண்டன். இதை 10 லட்சம் இஸ்லாமிய மக்கள் முன்னிலையிலும் கூற தயார். அவர்கள் விரும்பினால் எனக்கு ஓட்டு போடட்டும்."
இவ்வாறு நிதின் கட்கரி பேசியிருக்கிறார். இதன்மூலம் தான் பிரதமர் என்று வரும் பேச்சுகளுக்கு நிதின் கட்கரி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.