ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. சந்தித்திருக்கும் முதல் தேர்தல். முதல்வர் எடப்பாடியாரை பொறுத்தவரையில் இது ஒரு போர்தான். தனி மனிதனாக சுற்றிச் சுழன்று பெரியளவில் களமாடி முடித்திருக்கிறார் அவர்! என்று கொண்டாடுகின்றனர் அ.தி.மு.க.வினர். 

இந்நிலையில் இந்த தேர்தலில் தினகரனின் ஸ்லீப்பர்செல்களாக சில அமைச்சர்கள் செயல்பட்டு, கட்சியின் வெற்றி வேர்களை ‘கட்’ செய்துவிடும் கைங்கர்யத்தில் ஈடுபட்டார்கள்! என்று கழக தலைமைக்கு ஒரு தகவல் பறந்ததாம். அதன் அடிப்படையில் எடப்பாடியார்  ஒரு பக்கா உளவு டீமை போட்டு, அனைத்து மாவட்டங்களிலும் சர்வே நடத்தி ஒரு ரிப்போர்ட்டை வாங்கினாராம். அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்க, நகர செயலாளர்கள் என்றாரம்பித்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள் என்றெல்லாம் கூட கணிசமானவர்கள் ‘கால்வாரிய கேரக்டர்கள்’ ஆக கட்டம் கட்டப்பட்டுள்ளனர். 

இது போக தனி ஸ்பெஷல் ஃபைல் ஒன்றும் எடப்பாடியாரிடம் தரப்பட்டிருக்கிறது. அது...தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு எதிராகவும், அலட்சியமாகவும், கண்டுகொள்ளாமலும் செயல்பட்ட பத்து அமைச்சர்களின் லிஸ்டாம். தமிழக கேபினட்டை கிடுகிடுக்க வைத்திருக்கும் அந்த ஃபைலில் உள்ள அமைச்சர்களின் பெயர்கள் இப்போது கசிந்திருக்கிறதாம். 

அதிலுள்ள பெயர்கள் இவைதான்...கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின், ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன், உடுமலை ராதாகிருஷ்ணன், நடராஜன், வளர்மதி, செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன் ...ஆகியோர் என்கிறார்கள். 

இந்த பத்து பேரில் பலர் தினகரனுக்கு ஆதரவாக, கட்சிக்கு துரோகமாக செயல்பட்டனர் என்று நேரடியாக புகார்  இல்லாவிட்டாலும் கூட, கட்சியின் வெற்றியில் அக்கறை காட்டவில்லை, அலட்சியம் செய்தார்கள் என்று அதிகமாக புகார்கள் இருக்கின்றனவாம். 

இரண்டு ரிப்போர்ட்டுகளையும் பத்திரப்படுத்தி வைத்துவிட்டார் எடப்பாடியார்.  தேர்தல் முடிந்த பின்னரே களையெடுப்பு ஆக்‌ஷன் இருக்க வாய்ப்புள்ளது என்று தகவல்.

ஆனால் ரிசல்ட்டுக்குப் பின் ஆட்சி இருக்குமா? இவர்களின் நடவடிக்கைகளே ஆட்சியை காவு வாங்குவது போல்தானே இருக்கிறது? என்பதே மற்ற அமைச்சர்களின் கவலை மிகு கமெண்ட்.