ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்ததால் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் (தென் மண்டலம்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி (கொங்கு மண்டலம்), துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி (வடக்கு மண்டலம்), வைத்திலிங்கம் (மத்திய மண்டலம்) ஆகியோர் தனியாக சென்று ஆலோசனை நடத்தினர்.  

அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்யும் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை (ராஜ்ய சபா) எம்.பி. இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 10 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதி. திமுக சார்பில் போட்டியிடும் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓரிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் அதிமுக தலைமை குழப்பத்தில் உள்ளது.

அதற்குக் காரணம் 2 எம்.பி. பதவிகளுக்கு பல முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முட்டி மோதுகிறார்கள். ஜெயலலிதா இருந்தவரை மாநிலங்களவைத் தேர்தலில் அவர் யாரை அறிவிக்கிறாரோ அவர்கள்தான் வேட்பாளர்கள். ஆனால், தற்போது அதிமுகவில் கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து சீட்டை வாங்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அதிமுகவில் வட தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் ஜெ.சி.டி. பிரபாகர் போன்றோர் சீட்டுக் கேட்டு வருவதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில் சி.வி. சண்முகம் தனக்கோ அல்லது தன்னுடைய சகோதரர் ராதாகிருஷ்ணனுக்கோ வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செம்மலை, சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியை பாமகவுக்கு வழங்கியதால், தன்னால் போட்டியிட முடியவில்லை என்றும் தனக்கு எம்.பி. பதவி வேண்டும் என்று கோரி வருவதாகவ்ம் கூறப்படுகிறது. இதேபோல கோவை சத்யன் உள்ளிட்டோரும் இந்தக் கோதாவில் குதித்திருப்பதாகவும் அதிமுகவில் தகவல்கள் கசிகின்றன. தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தளவய் சுந்தரம் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது. இப்படி நாலாபுறமும எம்.பி. பதவியைக் கெட்டு நெருக்கடி கொடுப்பதால், அதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னால் அமைச்சர்கள், வழிகாட்டு உறுப்பினர்கள், முக்கியமான நிர்வாகிகள் என 21 பேர் மட்டுமே இதக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இதில் சீட்டு கேட்டு அழுத்தம் கொடுத்து வருபவர்களும் பங்கேற்றிருந்தார்கள். கூட்டத்திலும் குறிப்பிட்ட மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்க வேண்டும் என்று சில நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைத் தெரிவித்ததால் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் (தென் மண்டலம்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி (கொங்கு மண்டலம்), துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி (வடக்கு மண்டலம்), வைத்திலிங்கம் (மத்திய மண்டலம்) ஆகியோர் தனியாக சென்று ஆலோசனை நடத்தினர்.

 நால்வர் ஆலோசனைக் கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியதாகவும் தென் மண்டலம் கொங்கு மண்டலத்துக்கு இந்த முறை வேண்டாம் என்று ஈபிஎஸ் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. 45 நிமிடம் ஆலோசனைக்குப் பிறகு இறுதியாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் சீட்டு வழங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மண்டலத்தில் யாருக்கு வழங்கலாம் என்பதை இந்த நால்வரும் கூடி மீண்டும் முடிவு செய்வார்கள் என்றும் அதிமுக தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் ஒரிரு தினங்களில் வேட்பாளர்கள் அறிவிகப்பட்டுவிடுவார்கள் என்று அக்கட்சியின் நம்பக்த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.