தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும், காவிக்கொடி பறக்காது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவ மழையின் போது ஏற்படும் பேரிடரை எதிர்கொள்ள செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு துறையினரின் ஒத்திவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்;- தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. பள்ளி, கல்லூரிகளை நிவாரண முகாம்களாக மாற்றி உள்ளோம். வடகிழக்கு பருவமழையால் 60% குடிநீர், விவசாய தேவை பூர்த்தியடையும் எனவும் தெரிவித்தார்.

வேளாண் சட்ட திருத்த மசோதா தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்;- எதிர்க்கட்சிகள் எல்லா மசோதாக்களையும் எதிர்ப்பது போல விவசாய மசோதாவையும் எதிர்க்கின்றனர். அவர்களுக்கு என்ன புரிதல் இருக்கிறது என்று தெரியவில்லை. விவசாயத்தை மேம்படுத்த விவசாய மசோதா உதவும்.

இதையடுத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என எல்.முருகன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோட்டையில் தேசியக்கொடி தான் பறக்கும்  என விமர்சனம் செய்துள்ளார்.