தொல்.திருமாவளவன் பலமுறை சொல்லி இருக்கிறார். மதவாத பாஜகவோடும், சாதியவாத பாமகவோடும் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார். இன்றைக்கு இந்த இரண்டு பேரும் தனியாக பிரிந்து இருக்கிறார்கள்.
பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான பிளவு காரணமாக கட்சி இரு அணிகளாக செயல்படுகிறது. அன்புமணி தலைமையிலான பாமக அணி ஜனவரி 7ம் தேதி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. இது திமுகவுக்கு எதிரான பெரிய அணியாக உருவெடுத்துள்ளது.
இதனால் ராமதாஸ் தரப்பு தனியாக விடப்பட்ட நிலையில், அவர் திமுக பக்கம் திரும்புவதற்கான சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ராமதாஸ் திமுக ஆட்சியை ‘நன்றாகத்தான் இருக்கிறது’ என்று பாராட்டினார். 2006-2011ல் கருணாநிதி காலத்தில் திமுக அரசுக்கு பதவி,ஆட்சியில் பங்கு கேட்காமல் ஆதரவு அளித்ததை நினைவூட்டினார். ‘விசிக தலைவர் திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இணையலாமா?" என்ற கேள்விக்கு "அரசியலில் எதுவும் நடக்கலாம், எதிர்பாராததும் நடக்கும்" என்று பதிலளித்தார்.
ஆனால், பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என விசிக அழுத்தம் திருத்தமாக சொல்லி வருகிறது. இதுகுறித்து விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு, ‘‘தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பலமுறை சொல்லி இருக்கிறார். மதவாத பாஜகவோடும், சாதியவாத பாமகவோடும் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார். இன்றைக்கு இந்த இரண்டு பேரும் தனியாக பிரிந்து இருக்கிறார்கள். அந்த பிரிவு என்பது ஒரு பக்கம் அவர் அதிமுக பக்கம் போயிருக்கிறார்.
திமுக கூட்டணிக்கு ராமதாஸ் முயல்வதாக சொல்கிறார்கள். யூகங்கள் தான் எல்லாமே. என்னுடைய தலைவர் திருமாவளவம்தான் முடிவெடுப்பார். அது குறித்து எங்களுடைய தலைவர் அறிவிப்பார்’’ எனத் தெரிவித்தார். இந்நிலையில் அமித் ஷாவின் சென்னை வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘2014ல் இருந்தே தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார். பலமுறை வந்து போகிறார். 2016 ஆரம்பிக்கும் போது மோடி அலை என்று சொல்லி தான் வர ஆரம்பித்தார்கள்.
அதுவே இங்கே எடுபடவில்லை. தமிழ்நாட்டினுடைய அரசியல் என்பதை அவர்கள் வட மாநில அரசில் மாதிரி நினைத்துக் கொண்டு மதரீதியான ஒரு பதட்டத்தை உருவாக்குவது, திருப்பரங்குன்றம் போன்ற பிரச்சினை மையப்படுத்தி செயல் திட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் அது ஒருபோதும் அது வெற்றி பெறாது. மோடி போன்றவர்கள் ஒருமுறை அல்ல, இரண்டு முறை அல்ல. தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் அவர்களுடைய எந்த வேலை திட்டமும் வெற்றி பெறப் போவதில்லை. ஏனென்றால் இந்த மண் என்பது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் அவர்களுடைய மண். கருத்தியலை ஏற்றுக்கொண்டு ஒரு சமூக நீதி அரசியல் முன்னெடுக்கின்ற அரசியல் ஒரு மண்.

அவர்கள் முன்னெடுக்கின்ற அந்த அரசியல் என்பது இங்கு தமிழ்நாட்டுக்கு எதிரான ஒரு அரசியலை முன்னெடுக்கிறார்கள். இப்போது இருக்கின்ற அந்த போராட்டம் அல்லது இருக்கின்ற போட்டி டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போட்டி. டெல்லி அரசியலுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்குமான போட்டி. சமூக நீதி அரசியலுக்கும், அவர்கள் முன்னெடுக்கின்ற இந்துத்துவ அரசியலுக்குமான போட்டி தான். இந்த போட்டியில் கட்டாயம் அவர்கள் மண்ணை கவ்வி செல்வார்களே ஒழிய, வெற்றி பெற முடியாது’’ எனத் தெரிவித்தார்.

