திமுக மகளிரணி செயலாளர், திமுக எம்.பி., கருணாநிதியின் மகள், திமுக தலைவர் ஸ்டாலினின் தங்கை... இத்தனை தகுதிகள் இருந்தும் வேலூர் மக்களவை தொகுதி பிரச்சாரத்தில் தலைகாட்டவில்லை கனிமொழி. 

இதற்கு குடும்ப விவகாரங்கள் ஆயிரத்தெட்டு இருக்கலாம். ஆனாலும், அண்ணன் மு.க.ஸ்டாலினை விட்டுக் கொடுக்காமல் முட்டுக் கொடுத்து வருகிறார் பாசமிகு தங்கை கனிமொழி. அத்தோடு நடிகர் ரஜினிகாந்துக்கும் ஒரு விஷயத்தை உணர்த்த முயற்சித்து இருக்கிறார் கலைஞரின் தவப்புதல்வி. சேலம், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘’ நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை என மு.க.ஸ்டாலின் கூறுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி, ’’எதிர்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட தவறான கருத்தை பரப்புகிறார். போர்க்கால அடிப்படையில் நீலகிரியில் அனைத்து சீரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ எனக் கூறினார். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  கனிமொழி, ’’தமிழக மக்கள் அனைவராலும் அறியபெற்றவரான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளம்பர தேட வேண்டிய  அவசியமில்லை. நீலகிரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஏன் பார்வையிடவில்லை? அவரை யார் தடுத்தது? 

 கஜா புயலுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற திமுக போராடி வருகிறது. பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக, மத்திய அரசிடம் போதிய நிதியை கேட்டு பெற வேண்டும். ப.சிதம்பரம் குறித்து  முதல்வரின் கீழ்தரமான பேச்சுக்கு பதில் கூற முடியாது. காஷ்மீர் விவகாரத்தை ஆதரித்து பேசுவோர் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் அறிந்து பேச வேண்டும்’’ என பதிலளித்தார். 

சமீபத்தில், சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்காக அமித் ஷாவையும், மோடியையும் பாராட்டி பேசினார். அவரையும் கனிமொழி இந்தப்பேட்டியின் மூலம் மறைமுகமாக சாடியுள்ளார் என்றே கருதப்படுகிறது.