அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் என்பதை தாண்டி எம்பிக்கள் யார் பக்கம் என்பதில் தற்போது பரபரப்பான காட்சிகள் அரங்கேறி உள்ளன. சசிகலா நேற்றிரவு கூட்டிய எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் 24 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
டிசம்பர் 5 அதிமுகவில் பொதுச்செயலாளர் , முதல்வர் மாற்றம் வந்தது. பிப் 5 ல் எல்லாம் ஒரே குடையின் கீழ் வரவேண்டும் என்று சசிகலாவை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்று முடிவெடுத்து சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது.
அதன் பின்னர் ஓபிஎஸ் 7 ஆம் தேதி சசிகலாவுக்கு எதிராக அரசியல் பிரவேசம் எடுத்தார். அதன் பின்னர் எல்லாமே மாறிபோனது. கட்சி யார் கையில் என்ற இருக்க வேண்டும் ஆட்சி யார் கையில் இருக்க வேண்டும்.

என்பதில் வந்த பிரச்சனை இன்று முட்டிகொண்டு நிற்கிறது. இதனால் ஓபிஎஸ் சசிகலா தரப்பை எதிர்க்க கட்சி இரண்டாக பிளவு படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் கட்சி கட்டுகோப்பாக சசிகலா தரப்பு பக்கம் இருப்பது போல் தோன்றினாலும் , போக போக அதில் விரிசல் ஏற்பட துவங்கி யுள்ளது. எல்லோரும் மாநில அரசியலை உற்று நோக்குவதால் தற்போதைக்கு தங்களது எண்ணங்கள் பெரும்பாலானோர் வெளிக்காட்டாமல் உள்ளனர்.
ஆனால் நம்பிக்கை ஆதரவு கோரும்போது தானாக யார் யார் பக்கம் எனபது தெளிவாகும் என அதிமுக ஓபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.
இது மாநில அரசியல் என்றால் டெல்லி அரசியல் முற்றிலும் தலைகீழாக இருப்பதை காணமுடிகிறது. டெல்லியில் குறிப்பிட்ட 5 எம்பிக்கள் தவிர மற்ற அனைவரும் சசிகலா எதிர்ப்பு மனோபாவத்தில் இருக்கின்றனர் என்கின்றனர் அங்குள்ளவர்கள்.

நவநீத கிருஷ்ணன் , தம்பிதுரை , டாக்டர் வேணுகோபால் , விஜிலாசத்தியானந்த் , தஞ்சை எம்பி உள்ளிட்ட சிலரே சசிகலா ஆதரவாளர்களாக உள்ளனர் மற்றவர்கள் எதிர் மனநிலையில் உள்ளனர் என்று கூறுகின்றனர். அதிலும் 3 எம்பிக்கள் தற்போது நேராடியாகவே ஓபிஎஸ்சை ஆதரித்து விட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு சசிகலா போயஸ் தோட்டத்தில் அதிமுக எம்பிக்கள் கூட்டத்தை கூட்டினார். அதில் தற்போது உள்ள மக்களவை , மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 50 பேர் அதில் சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதை அடுத்து 49 பேர் உள்ளனர்.

மைத்ரேயன் ஓபிஎஸ்சை ஆதரிக்க மீதமுள்ள 48 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் நேற்று கூட்டப்பட்ட கூட்டத்தில் 24 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். மீதமுள்ள 24 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.
இதில் சிலர் இன்னும் டெல்லியில் உள்ளனர். ஆனால் சென்னை திரும்பிய 20 க்கும் மேற்பட்ட எம்பிக்கள் சசிகலா கூட்டிய எம்பிக்கள் கூட்டத்திற்கு செல்லவில்லை. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
கூட்டத்திற்கு வந்தவர்களில் 75% கூட சசிகலா அணியில் இருப்பார்களா? என்பது சந்தேகமே என்கிறார்கள். ஆகவே டெல்லி கட்சியினர் சுத்தமாக சசிகலா அணியை கைக்ழுவுகிறார்கள் என்பதே உண்மை என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
