அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி பெரும் கூட்டத்தோடு வந்து திமுகவில் இணைந்ததால் கரூர் மாவட்ட திமுகவில் அப்போது யாரும் அவருக்கு பெரிதாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

அடுத்து திமுகவில் முக்கியப்புள்ளியாகி அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆகி விட்டார் செந்தில் பாலாஜி. இந்த நேரத்தில்தான் இப்போது முன்னாள் மாவட்டச் செயலாளரான மறைந்த வாசுகி முருகேசனின் ஆதரவாளர்கள் இப்போது லேசாக எதிர்ப்பைக் கிளப்பி வருகிறார்கள்.

 

வாசுகி முருகேசனின் பிறந்த நாளின்போது ஆதரவாளர்கள் பலரும் ‘வாசுகி முருகேசனின் எதிரியான செந்தில் பாலாஜிக்கு மாவட்டச் செயலாளர் பதவியா? உண்மையான திமுக ரத்தம்தான் மாவட்டச் செயலாளராக இருக்க வேண்டும். நீங்கள் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எங்கள் அக்கா வாசுகி வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் எந்த வித பதவிகளையும் தராமல், தலைமையே தற்போது இப்படி முடிவெடுத்துள்ளது என்றால் உங்களது இறப்பில் ஏதோ மர்மம் இருப்பது என்பதை உணரமுடிகிறது. நீங்கள் உயிரிழந்ததும் திமுக ஆட்சிகாலத்தில் தான்.

ஆனால், தற்போதைய நமது தலைவர் அன்றைக்கு போர்படை தளபதி உங்களது இல்லத்திற்கு வந்து வாக்குறுதி கொடுத்தார். என்னவென்றால் உங்களது இல்லத்தில் ஒருவருக்கு எம்.பி அல்லது எம்.எல்.ஏ சீட் என்று கூறினார். இன்றோ யார் உங்களுக்கு அப்போது எதிரியோ அவருக்கே மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ பதவியை கொடுத்துள்ளார். இது தான் அரசியலா? உங்களது பிறந்த நாளில் உங்களது மரணம் பற்றி சந்தேகம் வருகிறது’’ எனக்கூறி போஸ்டர்கள் அடித்து வருகின்றனர். அத்துடன் வாசுகியின் கார் விபத்துக்குள்ளான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். இது கரூர் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.