அரியர்ஸ் தேர்வு விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் நடைமுறைபடியே செயல்படுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி விழுப்புரம்
மாவட்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கொரோனாவுக்கு தமிழகத்தில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக கூறினார்.

அரசு அறிவித்த வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார். விழுப்புரம் மாவட்டத்தில் தேவையான எண்ணிக்கையில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியால் தொற்று கட்டுக்குள் உள்ளது. தமிழகம் முழுவதும் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர் இருப்பார். மினி கிளினிக் திட்டம் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா சிகிச்சைக்கு போதுமான படுக்கை வசதிகள் உள்ளன.

மேலும், பேசிய முதல்வர் நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் எண்ணம் என்றும், நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். அரியர்ஸ் தேர்வு தேர்ச்சி தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழக அரசின் நலைமை தெளிப்படுத்திவிட்டதாக தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக்குழுவின் நடைமுறை வழியே தமிழக அரசு செயல்படும்  என்றும் தெரிவித்தார். கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு வந்த பிறகே பெற்றோர்களின் மனநிலையை ஆராய்ந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.