திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டம் அக்டோபர் 6 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தலைவராக கடந்த ஆண்டு தேர்வு செய்ய பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு இந்த ஆண்டு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறையாவது கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிகளில் ஒன்று. இதன்படி ஒவ்வொரு கட்சியும் பொதுக்குழுவை கூட்டுவதும் வழக்கம். அதிமுகவில் கடைசியாக 2017 செப்டம்பரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளார் எனப் புதிய பதவிகளை உருவாக்க இந்தப் பொதுக்குழு கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.
கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு முழுவதுமே நடைபெறவில்லை. ஜெயலலிதா இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் இறுதியில் பொதுக்குழு கூட்டத்தைக் கூடுவார். ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும் என்று எதிர்பார்த்த வேளையில், கஜா புயல் மற்றும் அதன் நிவாரணப் பணிகளைக் காரணம் காட்டி பொதுக்குழுவை ஒத்தி வைத்தது அதிமுக. இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பொதுக்குழுவைக் கூட்ட தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அவகாசம் கேட்டது.


அந்த அவகாசம் முடிந்த பிறகும் அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, ஒற்றைத் தலைமை தேவை என கட்சியினரின் பேச்சு, அமைச்சரவை காலி இடங்களை நிரப்புவது, உள்ளாட்சித் தேர்தல் என பல விஷயங்கள் பேசுபொருளாக இருந்தும், அதிமுக இதுவரை பொதுக்குழு கூட்டம் நடத்துவது பற்றி எதையும் அறிவிக்கவில்லை. ஜெயலலிதா இருந்தபோது தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஜெயலலிதா உரையுடன் பொதுக்குழு முடிந்துவிடும். ஆனால், இப்போது பொதுக்குழுவில் பேசுவதற்கு கட்சியினர் ஆர்வம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது.
அப்படி பேசும்போது அதிருப்தி வெளிப்பட்டால், அது சிக்கலாகும் நிலை உள்ளது. எனவே அதிருப்திகளை களைந்துவிட்டு பொதுக்குழு கூட்டம் நடத்தவே அதிமுக தலைமை விரும்புவதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுக பொதுக்குழு கூட்டத்தை அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.