அதிமுகவின் பொதுக்குழுவை 2019 ஜூன் இறுதிக்குள்  நடத்தி முடித்துவிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மாதம் இறுதிக்குள் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். 

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இந்த மாத இறுதிக்குள் கூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணைய விதிமுறைப்படி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறையாவது கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும். ஜெயலலிதா இருந்தவரை ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் இறுதியில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2016 டிசம்பர் இறுதியில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவால் அதிமுகவில் இரு அணிகள் இயங்கிவந்தன. இதனால், அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கிவைக்கப்பட்டது. இதற்கிடையே சசிகலா - தினகரன் அணியில் செயல்பட்டுவந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களை கட்சியிலிருந்து ஓரங்கட்டினார். இதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஒ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து அதிமுகவை மீட்டெடுத்தனர். அதனையொட்டி 2017 செப்டம்பரில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.