“அம்மா, சின்னம்மா ரெண்டு பேரும் என்னை அவர்கள் வீட்டு பெண் போல் பார்த்துக் கொண்டனர்.”

ஒரு காலத்தில் ஆந்திர சினிமாவின் மரண மாஸ் ஹீரோக்களை அலறி தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார் ஒரு ஹீரோயின். அவர்தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் பல இலக்கணங்களை உடைத்து எறிந்தவர் அவர். ஹீரோக்களை மட்டுமே துதி பாடிக் கொண்டிருந்த சினிமாவை ஹீரோயினை நோக்கியும் திரும்ப வைத்தது இவர் கொடுத்த அதிரிபுதிரி ஹிட்டுகள்தான். அதுவும் கண்ணீர் மற்றும் காதலால் இந்த ஹிட்டுகளை கொடுக்கவில்லை. ஆக்‌ஷனில் அடி தூள் கிளப்பியதன் மூலம் கிடைத்த வெற்றிகள் அவை.

அப்பேர்ப்பட்ட விஜயசாந்தி, சினிமாவிலிருந்து சற்றே ஒதுங்கி, அரசியலில் கால் வைத்து இப்போது தெலங்கானா பா.ஜ.க.வின் முக்கிய பெண் முகமாக இருக்கிறார். தமிழகத்தில் மதமாற்ற சர்ச்சையில் சிக்கியிருக்கும் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக வந்த உண்மை அறியும் குழுவில் முக்கிய நபராக வந்தவர், கையோடு சசிகலாவையும் சந்தித்து அரசியல் பட்டாசுக்கு பரபர தீயை வைத்துவிட்டுள்ளார் தேர்தல் நேரத்தில்.

சசிகலாவை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை! என அவர் எத்தனை முறை சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ள தமிழக அரசியலரங்கம் தயாரில்லை. இந்நிலையில், தமிழக விசிட் குறித்த பிரத்யேக பேட்டி ஒன்றில் விஜயசாந்தி வெளிப்படுத்தியிருக்கும் விஷயம் தி.மு.க.வை பல்லைக் கடிக்க வைத்துள்ளது.

அப்படி விஜயசாந்தி சொன்னது என்ன தெரியுமா?....”நான் சசிகலாவை சந்தித்தது அரசியல் சந்திப்பு அல்ல. அம்மா (ஜெயலலிதா)வை எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா, சின்னம்மா (ப்பார்றா….) ரெண்டு பேரும் என்னை அவர்கள் வீட்டு பெண் போல் பார்த்துக் கொண்டனர். என் வீட்டில் தி.மு.க.வினர் குண்டு வீசியபோது எனக்கு மிகப்பெரிய பாதுகாப்பை அம்மா ஜெயலலிதா அவர்கள் வழங்கியதை என்னால் மறக்கவே முடியாது. அவர் என் நெஞ்சில் இருக்கிறார்.

அம்மா வீட்டு பெண்ணாகதான் சசிகலாவை நான் சந்தித்தேனே தவிர அதில் அரசியல் இல்லவே இல்லை. அம்மா என்பவர் மிகப்பெரிய அரசியல் ஆளுமை. அவர் மிகப்பெரிய தைரியசாலியும் கூட. அவர் இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. அவரது இடம் இன்னமும் வெற்றிடமாகதான் இருக்கிறது. அவர் உயிருடன் இருந்திருந்தால் அ.தி.மு.க.வும் நன்றாக இருந்திருக்கும்.” என்று விளாசியிருக்கிறார்.

அப்படின்னா இப்ப அ.தி.மு.க. நல்லா இல்லைன்னு சொல்றீங்களா வி.சா..!?