தமிழகத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மார்ச் 16-ம் தேதி முதல் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்த தமிழக அரசு காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும் வருகை பதிவேட்டை வைத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் மற்றும் விடைத்தாள் சரியாக பராமரிக்காததால் மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், துறை ஆணையர் சிஜு தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, தேர்வு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், 10-ம் வகுப்புத் தேர்ச்சி அறிவித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதா, கிரேடு வழங்குவதா என்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதேபோல பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்வி முறைகள் குறித்து மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது. அதை அப்படியே ஏற்பதா, மாற்றங்கள் செய்வதா என்பது குறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.