தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடியும் நிலையில் ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

கொரோனா பரவலை தொடர்ந்து, நாடு முழுவதும் மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இடையிடையே பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும், பள்ளிகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்கவும், மின்சார ரயில்கள் இயக்கவும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுடன் காணொலிக்காட்சி வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதனையடுத்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசிக்க உள்ளார்.

ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக திரையரங்குகள் திறப்பு, பள்ளி, கல்லூரிகள்திறப்பு, மின்சார ரயில் சேவையை தொடங்குவது பற்றி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மின்சார ரயில் சேவையை தொடங்க ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.