1970 களின் தொடக்கத்தில் தமிழ்நாடு இருந்த நிலை குறித்து தற்போதுள்ள இளைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அகன்ற சாலைகள், விரைந்து செல்லும் வாகனங்கள், நூற்றுக் கணக்கான டி.வி. சானல்கள், கையில் நவீன செல்போன், இப்படி நவீன வசதிகள் எல்லாம் விடுங்கள். அந்த நாட்களில், 'படிப்பு' எந்த நிலையில் இருந்தது தெரியுமா...?


 
ஊருக்கு ஒருத்தர் கூட காலேஜுக்குப் போனது இல்லை. சமயம் கிடைக்கறப்போ, பழைய படங்கள்ல 'டைட்டில் கார்டு' பாருங்க. உண்மை புரியும். பேருக்குப் பின்னாலே, 'பி.ஏ.' படிப்பு மிகப் பெருமையாகக் காட்டப்பட்ட காலம் அது. இப்போ யாரேனும் அப்படி சொல்லிக்கிட்டா நமக்கு எல்லாம் சிரிப்பா இருக்கும் இல்லையா..? இந்த முன்னேற்றம் எப்போது யாரால் ஏற்பட்டது..?  1980களில் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., காலம் கடந்து தீர்க்க தரிசனத்துடன் செய்த பணிகளில் முதன்மையானது - தொழிற்கல்விக்கு அவர் தந்த முக்கியத்துவம். 

அன்று, பட்டப் படிப்பு என்றாலே 'பி.ஏ.'. பி.எஸ்.சி.' 'பி.காம். ஆகிய மூன்றுதான் மக்களுக்குத் தெரியும். இன்று..? எங்கு பார்த்தாலும் 'பி.இ.' 'பி. டெக்.'... 
இந்த மாற்றம் யாரால் எப்போது ஏற்பட்டது..? தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் நிகழ்த்திய அதிசயம் இது. மாறி வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப இளைஞர்கள் பெறும் கல்வியிலும் மாற்றம் வேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். இப்போது, +2 முடித்த மாணவர்களின் பெற்றோர் என்ன கேள்வியை முன் வைக்கிறார்கள்..? 

'என்ன படிப்பு படிச்சா.. எதிர்காலத்துல ரொம்பப் பயன் உள்ளதா இருக்கும்..'? இந்தக் கேள்வியைத்தான் எம்.ஜி.ஆர். கேட்டார். வெளி நாட்டுப் பயணம் மிகவும் அரிதாக இருந்த நாட்கள்; 'கம்ப்யூட்டர்' பரவலாக இன்னமும் கால் பதிக்காத காலம். அப்போது எம்,ஜி.ஆர். அவர்களுடன் நெருங்கிப் பழகிய பலருடன் நான் பேசித் தெரிந்து கொண்டது இது. யாராவது நன்கு படித்தவர், பல நாடுகளுக்கும் சென்று வந்தவர் என்றால், அவரிடம் சற்றும் கூச்சப் படாமல் எம்.ஜி.ஆர். கேட்பாராம் - 'இப்போ நாம குடுக்குற இந்தப் படிப்பு போதுமா..? வெளி நாடுகள்ல என்ன படிக்கிறாங்க..? எந்தத் துறையில என்ன படிச்சா... எதிர்காலத்துல நல்லதா இருக்கும்...?' 

அப்போது, 'இஞ்சினியரிங் காலேஜ்' என்றாலே சென்னை கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்தான். அநேகமாக நாள்தோறும் எம்.ஜி.ஆர். அந்த வழியாகத்தான் தலைமைச் செயலகத்துக்குப் போவார். இந்தக் கல்லூரி பற்றி சிறிது சிறிதாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருக்குள் ஓர் இனம் புரியாத வியப்பு; நம்பிக்கை. தமிழ்நாடு முழுக்க தொழிற்கல்வியை மேம்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார். குறிப்பாக பொறியியல் கல்லூரிகள் பெரும் எண்ணிக்கையில் உருவாக வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனடியாகக் களத்தில் இறங்கினார்.

தமிழ்நாடு எங்கும், எல்லா மாவட்டங்களிலும், பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்குத் தேவையான உதவிகளை அள்ளி வழங்கினார். நான்கு / ஐந்து ஆண்டுகளில், ஆங்காங்கே நூற்றுக் கணக்கான பொறியியல் கல்லூரிகள் முளைத்தன. 1987இல் எம்.ஜி.ஆர். அமரர் ஆனார். ஆனால் அவர் முன்னெடுத்த பொறியியல் கல்வி, வேரூன்றி விட்டது. ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கில் பொறியாளர்கள் வெளிவந்தனர். 

1990களின் தொடக்கம். 'software industry' எனப்படும் கணினி, மென்பொருள் சார்ந்த சேவைத் துறை, அதிரடியாக உள்ளே நுழைந்து, அசுரத்தனமாக வளர்ச்சி பெற்றது. வரிசையாக நூற்றுக் கணக்கில்,மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள் உருப்பெற்றன. இங்கே பணி புரிய, தகுதி வாய்ந்த பொறியாளர்கள் 
வேண்டுமே..! இருந்தார்கள். தமிழ்நாட்டில், தயாராக இருந்தார்கள். எப்போது 'டிமாண்ட்' ஏற்பட்டதோ, அப்போதே தேவையான எண்ணிக்கையில், உடனடியாக 'சப்ளை' செய்கிற திறன் பெற்றதாகத் தமிழ்நாடு விளங்கியது. 

இந்தியாவில் தமிழ்நாட்டில் சேவைத் துறை செழித்து வளர்ந்தது. காரணம், சிற்றூரில் இருந்தும் கூட படித்த திறமையான பொறியாளர்கள் ஏராளமாக வந்து கொண்டே இருந்தனர். புதிதாக ஒரு துறை அறிமுகம் ஆகும்; அங்கே ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கும்; அதற்கு பொறியியல் படிப்பு பெரிதும் உதவும்
என்றெல்லாம் எம்.ஜி.ஆர் எப்படி உணர்ந்தார்..? மிகச் சரியாகக் கணித்து, ஆயிரமாயிரம் பொறியாளர்களை சரியான நேரத்தில் சந்தைக்குக் கொண்டு வந்தது எப்படி..? 

இன்று உலகம் முழுவதும் சின்னஞ்சிறு நாடுகளிலும் தமிழர்கள் நிறைந்து இருக்கிறார்கள்; நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள். பல லட்சம் குடும்பங்கள் வறுமையில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கின்றன. கிராமங்களில் குடிசைகள் மறைந்து கட்டிடங்கள் எழுந்து நிற்கின்றன. இத்தனையும் எப்படி யாரால் வந்தது..?

 

தீர்க்க தரிசனத்துடன் முன்கூட்டியே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட தொழிற்கல்வி நமக்குக் கிடைத்தது. நாம் பயன் அடைந்தோம். இந்தச் சாதனைக்கு அடித்தளம் இட்டவர் - எம்.ஜி.ஆர். இன்றைய இலைஞர்கள் நினைவில் கொள்ளட்டும் - புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதற்கேற்ப இளைஞர்களைத் தயார் செய்வதில், எம்.ஜி.ஆர்.' ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுகளின் பங்களிப்பு  மிகச் சிறப்பானது. எம்.ஜி.ஆர் செய்த சமுதாயப் புரட்சி குறித்துப் பார்க்கலாமா..? 

(வளரும்.

 

கட்டுரையாளர் - பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.