இந்தியை நாட்டின் இணைப்பு மொழியாக அங்கிகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என அமித்ஷா கூறியுள்ள நிலையில் இந்தியை ஒருபோதும் தமிழ் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியை நாட்டின் இணைப்பு மொழியாக அங்கிகரிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என அமித்ஷா கூறியுள்ள நிலையில் இந்தியை ஒருபோதும் தமிழ் நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் மட்டும் அல்ல தமிழக மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியை அனுமதிக்கமாட்டோம் என திராவிட கட்சிகள் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கண்டிப்பு காட்டி வரும் நிலையில் அட அண்ணாமலையும் இந்தி விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் குரலிலேயே ஒலிக்க தொடங்கியுள்ளாரே என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

அக்காட்சியின் தேசிய தலைமை இந்தியை அங்கீகரிக்க முயற்சிக்கும் நிலையில், அதன் தமிழ்நாட்டு தலைமை அதை எதிர்ப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வியும், இது உண்மையிலேயே தமிழ் உணர்வா அல்லது உள்ளார்ந்த அரசியலா என்ற வினாவும் எழாமல் இல்லை. மத்தியில் காங்கிரஸ் அல்லது பாஜக என யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தி மொழியை நாட்டின் இணைப்பு மொழியாக, தேசிய மொழியாக ஆக்குவதில் குறியாக இருந்து வருகின்றனர். 

அப்படி ஆகிவிட்டால் மொழி அளவில் நாட்டை ஒருமைப்படுத்தி விடமுடியும் என்பது அக்கட்சிகளின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த நோக்கத்தில்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது முதலிருந்த ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரே நாடு ஒரே மொழி என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. நாட்டை இரண்டாவது முறையாகவும் அக்கட்சி ஆட்சி செய்ய வாய்ப்புக் கிடைத்துள்ள நிலையில், தங்களின் அஜெண்டாக்கள் ஒவ்வொன்றையும் விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அது துடிக்கிறது. பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்பது போன்ற அதன் நீண்ட நாளைய திட்டங்களில் ஒன்றுதான் ஒரே நாடு ஒரே மொழி. அதுதான் இந்தி மொழி..

அதன் வெளிப்பாடாக தான் தற்போது அமித்ஷா இந்தி மொழியை தேசிய அளவில் இணைப்பு மொழியாக அங்கிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பேசத் துணிந்திருக்கிறார். இது எவ்வளவு விபரீதமானது என்பதை அவர் ஒன்றும் அறியாதவர் அல்ல. ஆனால் அதிகாரத்தில் இருக்கும்போது தங்கள் திட்டங்களை ஒவ்வொன்றையும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற வேகமும், நோக்கமும் அதில் மறைந்திருப்பதை உணராமல் இருக்க முடியவில்லை. ஆனால் அவரின் இந்தப் பேச்சுக்கு குறிப்பாக தென் இந்திய மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை காட்டியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அமித்ஷாவின் பேச்சை கடுமையாக எச்சரித்துள்ளன.

குறிப்பாக தமிழ்நாடு உச்சபட்ச கொதி நிலைக்கு சென்றுள்ளது என்றே சொல்லலாம், தமிழ்நாடு இந்திக்கு எதிராக நடத்திய மொழிப்போர் வரலாறு அமித்ஷா உள்ளிட்ட வட மாநிலத்தலைவர்கள் நன்கு அறிந்தே உள்ளனர். ஆனாலும் அவர் இப்போது அதை பேசத் துணிந்துள்ளார். இந்நிலையில்தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா வேண்டாம், இந்தி மொழி போதுமென அமித்ஷா முடிவு செய்துவிட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் அமித்ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். தென் மாநிலங்களின் இந்த கடுமையான எதிர்பால் அமித்ஷா இந்த விவகாரத்தில் இன்றுவரை மௌனம் காட்டி வருகிறார். இந்தி மொழி திணிப்பு அமில பரிசோனை என்பதை தெரிந்தும் அவர் இது குறித்து பேசியுள்ளார் என்றால், மாநிலங்களின் மன நிலையை ஆழம் பார்க்கிறார் என்றே விஷயம் அறிந்த அரசியல் நோக்ககர்கள் கருத்தாக உள்ளது.

அதே நேரத்தில் அமித்ஷாவின் இந்த பேச்சை வழக்கம் போல பாஜகவினர் ஆதரித்து வருகின்றனர். தமிழக பாஜக முன்னணித் தலைவர்கள் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் மட்டும் ஹிந்தி படிப்பதை ஆதரிக்கலாமா என்று திமுகவை கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில்தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எதிர் பாராத விதமாக இந்தியை தமிழ்நாட்டுக்குள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தி திணிப்பை ஏற்க முடியாது. எத்தனை பேர் இந்தி பேசுவார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் நான் இந்தி பேச மாட்டேன் என கூறியுள்ளார்.

தேசிய தலைமையின் கருத்தில் இருந்து அண்ணாமலை முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார். இந்த இடம்தான் பாஜகதொண்டர்கள், சாமானிய மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் உண்மையை பேசுகிறார்கள்? அமித்ஷா திட்டத்தை அறிவிக்கிறார் என்றால் அக்கட்சியின் மாநிலத்தலைவர் அதை எதிர்க்கிறாரே என பலருக்கும் ஐயம் எழக்கூடும். ஆனால் இது புரிந்துக் கொள்ள முடியாது கம்ப சூத்திரமும் அல்ல என்பது பாஜகவினருக்கே நன்கு தெரியும். மொத்தத்தில் இதில் மொழி உணர்வு என்பதையும் தாண்டி, அப்பட்டமாக அரசியல் மறைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது. பாஜக கொண்டு வரும் பெரும்பாலான திட்டங்கள் தமிழ்நாட்டில் எதிர்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அமித்ஷாவின் இந்தி விவகாரமும் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதை அறிந்து கொண்ட அண்ணாமலை தமிழக பாஜகவும் இந்தி திணிப்பை எதிர்க்கிறது என கூறியுள்ளார்.

அதாவது நீண்ட நாட்களாக தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்ற முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை அதற்கு பெரிய பலன் இல்லை, அதற்குக் காரணம் பாஜக தமிழக மக்களின் எண்ண ஓட்டத்துக்கு உகந்ததாக இல்லை, தமிழக மக்களின் அலைவரிசைக்கு ஒத்துப்போகவில்லை, கொள்கை ரீதியாகவும், செயல்பாடுகள் ரீதியாகவும் அன்னியப் பட்டு நிற்கிறது இதுவே கட்சி எடுபடாமல் போவதற்கு காரணம் என்ற விமர்சனம் இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் தமிழக மக்களின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தமிழக மக்களுடன் சேர்ந்து தானும் இந்தியை எதிர்ப்பதாக அவர் அறிவிக்கிறார் என கூறப்படுகிறது. இந்திக்கு எதிராக குரல் கொடுப்பதால், பாஜகவின் தேசியத் தலைவர்களில் ஒருவரான அமித்ஷாவின் கூற்றையே எதிர்ப்பதால் தமிழக மக்களிடம் நம்பிக்கை நிறைந்த தலைவராக வர முடியும் என அண்ணாமலை தரப்பு நம்புவதாகவும் இதற்கு பின்னணியாக கூறப்படுகிறது. இந்தி வரும்போது வரட்டும் ஆனால் அதை இப்போது எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பை பெறமுடியும் என்ற அரசியல் உத்தியாக இந்தி எதிர்ப்பை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார் என்றே அவரின் ஹிந்தி மொழி எதிர்ப்பு நிலைப்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர்.