அதிமுக எதிர்கொண்ட கடைசி 8 தேர்தல்கள்..! எடப்பாடி பழனிசாமியால் கட்சிக்கு வீழ்ச்சியா.? வளர்ச்சியா.?
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் முக்கிய பொறுப்பே ஏற்றுக்கொண்ட பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 8 தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்ன.?
இந்தியாவின் 3 வது பெரிய கட்சி
இந்தியாவின் 3 வது பெரிய கட்சியாக அதிமுகவை நிலை நிறுத்தியவர் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு பிறகு இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தை பெற்றவர் ஜெயலலிதா, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லையென சூளுரைத்தவர் ஜெயலலிதா, அவர் இருந்தவரை அதிமுக அசூர வளர்ச்சி பெற்றது. 2016 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிப்பால் ஜெயலலிதா மறைந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. இதனையடுத்து அதிமுகவில் நடைபெற்ற அதிகார போட்டியால் பல பிளவுகள் ஏற்பட்டது. முதலில் டிடிவி தினகரன், அதன்பின்பு சசிகலா தற்போது ஓ.பன்னீர் செல்வம் என பிரிந்து ஓட்டுகள் சிதறுண்டு கிடைக்கிறது. எப்போதும் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என அணைவராலும் கூறப்பட்டு வந்தது. தற்போது ஈரோடு தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டுகளை பெறுவதற்கே மூச்சு முட்ட வேண்டியுள்ளது.
அடுத்தடுத்து தோல்வியை சந்தித் இபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆளும்கட்சியான அதிமுகவை தோற்கடித்து வெற்றிபெற்றார். இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் தேனி தொகுதியை தவிர மற்ற 38 தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். அப்போது நடைபெற்ற 22 தொகுதி இடைத்தேர்தலிலும் தங்கள் வசம் இருந்து எம்எல்ஏக்களை இழந்தார்.
8 தோல்விகளை சந்தித்த அதிமுக
இதனையடுத்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவை திமுக தோற்கடித்து அதிக இடங்களை கைப்பற்றியது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டு முறை ஆட்சியை தக்கவைத்த அதிமுகவால் 3வது முறையாக தக்கவைக்க முடியாத நிலை ஏற்பட்டது. கொங்கு மண்டலத்தை தரவி மற்ற இடங்களில் படு தோல்வி அடைந்தது. இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 9 மாவட்ட ஊராக வளர்ச்சி உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சியையும் அதிமுக இழந்து 10 % இடங்களை மட்டும் கைப்பற்றியது.
மீண்டும் ஒன்று சேருவார்களா.?
இதனையடுத்து தற்போது 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 65 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தது. தமிழகத்தில் அதிக வாக்கு சதவிகிதத்தை கொண்ட கட்சியான அதிமுக தற்போது காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்கு சதவிகிதத்தில் பாதியளவு மட்டுமே பெற்றுள்ளது. எனவே அதிகார போட்டியால் பிரிந்து கிடக்கும் அதிமுக வாக்குகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அடுத்து வரும் தேர்தலி்களில் வெற்றி பெற முடியும். எனவே மாடு-சிங்கம் கதை போன்று பிரிந்து கிடக்காமல் ஒன்றிணைய வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.
இதையும் படியுங்கள்